வெடித்தது புது சர்ச்சை.. இது கலாசாரத்திற்கு எதிரானது.. ராகுல் காந்தியை பொளக்கும் பாஜக
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படத்திற்கு ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மரியாதை செலுத்துவதற்கு முன்பு ராகுல் காந்தி செருப்பை கழற்றவில்லை எனக் கூறி பாஜக விமர்சித்து வருகிறது.

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இந்திரா காந்தியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் முன் செருப்பை கழற்றவில்லை என ராகுல் காந்திக்கு எதிராக புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இது கலாசாரத்திற்கு எதிரானது என பாஜக விமர்சித்து வருகிறது.
ராகுல் காந்தியை பொளக்கும் பாஜக:
காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி விவகாரங்கள் பற்றி விவாதிப்பதற்கு அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்தியப் பிரதேசத்திற்கு சென்றுள்ளார். கட்சியை வலுப்படுத்துவது குறித்து மாநில தலைவர்களிடம் ஆலோசனை செய்வதற்காக ராகுல் காந்தி சென்றிருந்த நிலையில், அவர் செய்த ஒரு செயல் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
போபாலில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படத்திற்கு ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மரியாதை செலுத்துவதற்கு முன்பு ராகுல் காந்தி செருப்பை கழற்றவில்லை எனக் கூறி பாஜக விமர்சித்து வருகிறது.
இதுகுறித்து மத்தியப் பிரதேச முதலமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மோகன் யாதவ் கூறுகையில், "ராகுல் காந்தி தனது பாட்டி இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் போது தனது காலணிகளை கழற்றவில்லை. அது சரியான செயல் இல்லை. இது நமது கலாச்சார விழுமியங்களுக்கு எதிரானது. இதுபோன்ற விஷயங்களில் அவர் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.
வெடித்தது புது சர்ச்சை:
பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஹிதேஷ் வாஜ்பாய், இதுகுறித்து பேசுகையில், "தனது பாட்டிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும்போது தனது காலணிகளைக் கூட கழற்றாத ஒருவர் பாரத மாதாவின் மரியாதையை எப்படி நிலைநிறுத்துவார்? இவ்வளவு பண்பாடற்ற ராகுல் காந்தியை காங்கிரஸ் என்ன செய்யும்? சுய அழிவுப் பாதையில் செல்லும் ஒருவர் எப்படி தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதாகக் கூற முடியும்? இப்படிப்பட்ட பேரனுக்கு அவமானம்" என்றார்.
அஞ்சலி செலுத்தும் போது கலந்து கொண்ட மற்ற தலைவர்களில் மத்தியப் பிரதேச எதிர்க்கட்சித் தலைவர் உமாங் சிங்கரும் ஒருவர், அவர் காலணிகளை அணிந்துகொண்டு மலர் தூவி மரியாதனை செலுத்தினார். மறுபுறம், மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜீது பட்வாரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் தங்கள் காலணிகளைக் கழற்றிவிட்டு, அஞ்சலி செலுத்தினர்.





















