அரசு வேலைகளை ஏலம் விடுகிறது கர்நாடகா: ராகுல் காந்தி சரவெடி
சித்ரதுர்கா: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன் கிழமையன்று சித்ரதுர்காவில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார்.
சித்ரதுர்கா: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன் கிழமையன்று சித்ரதுர்காவில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். அப்போது அவர் 2000க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தினார். அப்போது கர்நாடகா அரசு மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ராகுல் பேசியதாவது:
”வேலைவாய்ப்பின்மை பிரச்சினையில் இளைஞர்கள் சிக்கியிருக்க கர்நாடகாவில் பாஜக அரசு வேலையை ஏலம் விட்டு சம்பாதிக்கிறது. மாநிலத்தில் அண்மைக்காலமாக ஊழல் மிகுந்துள்ளது. அதுவும் குறிப்பாக அரசு வேலைவாய்ப்பில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. காவல்துறையில் உதவி ஆய்வாளர் வேலைக்கு ரூ.80 லட்சம் வரையும், உதவிப் பேராசிரியர், உதவிப் பொறியாளர் பதவிக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது” என்று ராகுல் காந்தி கூறினார்.
35 வது நாள் யாத்திரை:
ராகுல் காந்தி தனது யாத்திரையைத் தொடங்கி 35 நாட்கள் ஆன நிலையில் கர்நாடகாவில் தீவிர சுற்றுப் பயணத்தில் உள்ளார். 15வது நூற்றாண்டு வரலாற்று சிறப்புமிக்க கோட்டை உள்ள சித்ரதுர்காவில் ராகுலை மக்கள் வெகுவாக வரவேற்றனர். ராகுல் காந்தியுடன் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் கலந்து கொண்டார். அப்போது அவர் நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையை உணர்த்தும் டிஷர்ட் அணிந்து சென்றார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும் வெற்று வாக்குறுதிகள் அல்ல என்று அந்த டிஷர்ட்டில் எழுதப்பட்டிருந்தது.
சிவக்குமார் பேசுகையில் இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியின் இணையதளத்திற்குச் சென்று அதில் தங்கள் வேலைவாய்ப்பு நிலவரம், பெயர், வயது, மற்ற தகுதிகளை பதிவிடச் சொல்லி வலியுறுத்தினார்.
சித்ரதுர்கா யாத்திரையில் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினர், தனிநபர்கள் ராகுல் காந்தியுடன் யாத்திரை செய்தனர். இதில் தேசிய திரைப்பட விருது வெற்றியாளர் சன்சாரி விஜயின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். விஜய் ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தார். சிகமகளூரு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரக்ஷிதா, இன்னொரு இளைஞர் வேதா மஞ்சுநாத் ஆகியோர் ஆகியோரும் விபத்தில் இறந்தவர்கள் தான். அவர்களின் உறுப்புகளும் தானம் செய்யப்பட்டது. அந்தக் குடும்பத்தினரும் ராகுல் காந்தியுடன் யாத்திரையில் கலந்து கொண்டனர்.
உறுப்பு தானம் பற்றி ராகுல் காந்தி பேசுகையில், ரக்ஷிதா, வேதா, விஜய் ஆகியோர் உயிரிழக்கும் வயதில்லை ஆனால் அகால மரணமடைந்தனர். அன்பு, தியாகத்தின் வெளிப்பாடாக அவர்கள் குடும்பத்தினர் தங்கள் உயிருக்கு உயிரானவர்களின் உறுப்புகளை தானமாகக் கொடுத்துள்ளனர். இதனால் இறப்பிலும் அவர்கள் பிறருக்கு மகிழ்ச்சியைக் கடத்திச் சென்றுள்ளனர். இவர்களின் தியாகத்தை நாம் கொண்டாட வேண்டும். பிறரை பேணுவதும், இரக்கம் காட்டுவதும் அவசியம் என்றார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நாடு முழுவதும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.