Parliament: ராகுல் காந்தி பதவி நீக்கம்... உச்சகட்ட பரபரப்பில் கூடுகிறது நாடாளுமன்றம்..! என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்?
ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் இன்று நாடாளுமன்றம் கூடுகிறது.
ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் இன்று நாடாளுமன்றம் கூடுகிறது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதி மன்றம் தீர்ப்பளித்தது. அதன் பின்னர், ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பொறுப்பை மக்களவைச் செயலகம் தகுதி நீக்கம் செய்தது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பெறும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர். அதில் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கவுள்ளனர்.
ஏற்கனவே கடந்த 2 வாரங்களாக அதானி விகாரத்தினை எதிர்கட்சிகளும், ராகுல் காந்தி லண்டனில் பேசிய விவகாரத்தினை ஆளும் பாஜகவினரும் கண்டித்து தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பட்ஜெட் மீது விவாதம் இதுவரை நடத்தப்படாமல் உள்ளது.
இந்நிலையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, இன்று காங்கிரஸ் கட்சியினர் பெரும் அமளியிலும் போராட்டத்திலும் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றுக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதம் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். பிரச்சினைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் ராஷ்டிரபதி பவன் நோக்கி பேரணியாக சென்றனர்.
அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தி பேசியதாக, ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் மீதான விசாரணையின் முடிவில், ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. அதேநேரம், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியதோடு, மேல் முறையீடு செய்ய 1 மாத கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பின் காரணமாக வயநாடு தொகுதியின் எம். பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ராகுல் காந்தி, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து மார்ச் 25 அன்று பேசினார்.
அப்போது கூறிய அவர், “ஒரு முறை அல்ல, நிரந்தரமாக என்னைத் தகுதி நீக்கம் செய்தாலும் கேள்வி கேட்பதை நான் நிறுத்தப்போவதில்லை. மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, காந்தி.
நான் பேசுவதைக் கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார். அதானி பற்றி நான் பேசும்போது, அவரின் கண்களில் பயத்தைப் பார்த்தேன். பிரதமரின் அச்சத்தை திசை திருப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனக்கு உண்மையைப் பேசுவதில் மட்டுமே விருப்பம் உள்ளது. அதை தொடர்வேன் என குறிப்பிட்டு பேசினார்.