"சமூக புரட்சி.. செஞ்சி காட்டுவோம்" பழைய ஃபார்முலாவை மீண்டும் கையில் எடுத்த ராகுல் காந்தி!
தெலங்கானாவில் சாதிய கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதை தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது. இதை, சமூக நீதியை நோக்கிய புரட்சி என ராகுல் காந்தி பாராட்டியுள்ளார்.

மக்களவை தேர்தலில் சாதி கணக்கெடுப்பு குறித்து தொடர் பிரச்சாரம் செய்து, குறிப்பிடத்தகுந்த வெற்றியை பதிவு செய்த ராகுல் காந்தி, மீண்டும் அதே ஃபார்முலாவை கையில் எடுத்துள்ளார். தெலங்கானாவில் சாதிய கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதை தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது.
நாட்டுக்கு வழிகாட்டிய தெலங்கானா:
சாதிய கணக்கெடுப்பு உள்பட பல வாக்குறுதிகளை அளித்து தெலங்கானாவில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ், ஒவ்வொரு வாக்குறுதிகளையும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறது. அதன்படி, அங்கு சாதிய கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அதில், தெலங்கானாவின் மக்கள் தொகையில் 56.33 சதவிகிதத்தினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில், தேர்தல் வாக்குறுதியின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வரம்பை தெலங்கானா காங்கிரஸ் அரசு உயர்த்தியுள்ளது. அரசு வேலைகள், கல்வி நிறுவனங்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வரம்பு 42ஆக உயர்த்த வழி செய்யும் இரண்டு மசோதாக்கள் தெலங்கானா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் குறிப்பிட்ட ராகுல் காந்தி, "தெலங்கானாவில் ஓபிசி இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக காங்கிரஸ் அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது.
ராகுல் காந்தியின் பழைய ஃபார்முலா:
மாநிலத்தில் அறிவியல் பூர்வமான சாதி எண்ணிக்கை மூலம் பெறப்பட்ட ஓபிசி சமூகத்தினரின் உண்மையான எண்ணிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் அவர்களின் சம பங்களிப்பை உறுதி செய்வதற்காக சட்டமன்றத்தில் 42% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.
இது உண்மையில் சமூக நீதியை நோக்கிய ஒரு புரட்சிகரமான படியாகும். இதன் மூலம் மாநிலத்தில் 50% இடஒதுக்கீடு என்ற சுவரும் இடிக்கப்பட்டுள்ளது. சாதி கணக்கெடுப்பு தரவுகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளையும் பகுப்பாய்வு செய்வதன் மூலம், அனைவரின் நல்வாழ்வையும் உறுதி செய்யும் கொள்கைகள் வகுக்கப்படும். தெலுங்கானா அரசு இதற்காக ஒரு சுயாதீன நிபுணர் குழுவையும் அமைத்துள்ளது.
எக்ஸ்ரே மூலம் மட்டுமே - அதாவது சாதி கணக்கெடுப்பு மூலம் மட்டுமே - பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்கள் தங்கள் உரிய உரிமைகளைப் பெற முடியும் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். தெலங்கானா வழி காட்டியுள்ளது. இதுதான் முழு நாட்டிற்கும் தேவை. இந்தியாவில் சாதி கணக்கெடுப்பு நிச்சயமாக நடக்கும் நாங்கள் அதைச் செய்வோம்" என குறிப்பிட்டுள்ளார்.

