Rahul Gandhi Bail: பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கு.. ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..
பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, பாஜக அரசை விமர்சித்து ராகுல்காந்தி பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதனை எதிர்த்து பாஜகவின் கர்நாடக பிரிவு தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
பாஜக அரசு பொதுப்பணியில் 40% கமிஷன் பெறும் அரசு என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியது. அதேபோல் ஊழல் மிகுந்த அரசு பாஜக அரசு என செய்தி நாளிதழில் விளம்பரங்களும் சுவரொட்டிகளும் காங்கிரஸ் தரப்பில் ஒட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் கர்நாடக மாநில பாஜக தலைவர் பொய் விளம்பரங்களை காங்கிரஸ் பரப்பி வருவதாக பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார் ஆகியோர் மீது இந்த வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே சிவகுமார் ஆகியோர் கடந்த 1 ஆம் தேதி ஆஜரான நிலையில் அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஆனால் அன்றைய தினம் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், அடுத்த விசாரணையின் போது கட்டாயம் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து விசாரணையை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.
அதன்படி இன்று ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இதையடுத்து ராகுல் காந்திக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.