DGP Appointment: மத்திய அரசுக்கு பதிலாக மாநிலமே டிஜிபியைத் தேர்வு செய்யலாம்; மசோதா நிறைவேற்றிய பஞ்சாப்
மத்திய அரசுக்கு பதிலாக மாநிலமே டிஜிபியைத் தேர்வு செய்யலாம் வகையில், பஞ்சாப் காவல்துறை சட்டத் திருத்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசுக்கு பதிலாக மாநிலமே டிஜிபியைத் தேர்வு செய்யலாம் வகையில், பஞ்சாப் காவல்துறை சட்டத் திருத்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. பஞ்சாப் விதான் சபா என்று அழைக்கப்படும் பஞ்சாப் சட்டப்பேரவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், பஞ்சாப் மாநிலமே டிஜிபியைத் தேர்ந்தெடுக்கும்.
டிஜிபி தேர்வு செய்யப்படுவது எப்படி?
பணி மூப்பு, தகுதி, திறமை உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் குறிப்பிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் மாநில அரசால் தேர்வு செய்யப்படுவர். அந்தப் பட்டியல் மத்திய அரசிடம் வழங்கப்படும். அதில் இருந்து 3 பேரை யூபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகளும் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளும் தேர்வு செய்து, மாநில அரசிடம் வழங்குவர். இதில் இருந்து ஒருவர் மாநில அரசால், டிஜிபியாகத் தேர்வு செய்யப்படுவார்.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் மாநிலங்களே டிஜிபியைத் தேர்வு செய்வதற்கான பஞ்சாப் காவல்துறை சட்டத் திருத்த மசோதா நேற்று (ஜூன் 20) நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், பஞ்சாப் மாநிலமே டிஜிபியைத் தேர்ந்தெடுக்கும்.
பொறுப்பு டிஜிபி
பஞ்சாப்பில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் - ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. இக்கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி பொறுப்பு டிஜிபி ஒருவர் ஆறு மாத காலத்துக்கு நியமிக்கப்பட்டார். அவருக்குப் பின்னர், டிஜிபி பதவிக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியலை, மத்திய அரசிடம் பஞ்சாப் அரசு வழங்கவில்லை. 11 மாதமாக பொறுப்பு டிஜிபியே பதவியில் இருக்கிறார்.
இதையடுத்து உரிய அதிகாரிகளின் பட்டியலை வழங்குமாறு மத்திய அரசு பஞ்சாப் அரசிடம் கேட்டது. எனினும் டிஜிபி நியமனம் மாநில அரசுக்கு உரியது என்று தெரிவித்த பஞ்சாப் அரசு, மாநில அரசே டிஜிபியைத் தேர்ந்தெடுக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது.
முன்னதாக, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில அரசுகள், டிஜிபியைத் தாங்களே நியமித்துக்கொள்ளும் மசோதாக்களை 2018ஆம் ஆண்டில் நிறைவேற்றின. மூன்றாவது மாநிலமாக பஞ்சாப்பும் இத்தகைய மசோதாவை நிறைவேற்றி உள்ளது. இதன்படி, மாநில அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட 7 பேர் கொண்ட குழு உருவாக்கப்படும்.
இந்தக் குழுவில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில நீதிமன்றங்களின் ஓய்வுபெற்ற நீதிபதிகள், பஞ்சாப் மாநில தலைமைச் செயலாளர், பஞ்சாப் அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர், உள்துறை அமைச்சக செயலாளர், ஓய்வுபெற்ற டிஜிபி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இருப்பர். அவர்கள் தகுதி வாய்ந்த 3 பேர் கொண்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியலைத் தேர்வு செய்து மாநில அரசிடம் கொடுப்பர். இதில் இருந்து ஒருவர் பஞ்சாப் மாநில அரசால், டிஜிபியாகத் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.