Pulwama Attack: 'புல்வாமா தாக்குதலுக்கு மத்திய அரசே காரணம்; அமைதியா இருனு சொன்ன பிரதமர்' - முன்னாள் காஷ்மீர் ஆளுநர் சரமாரி குற்றச்சாட்டு
புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு மத்திய அரசின் குளறுபடியே காரணம் என்றும், என்னை அமைதியாக இருக்கும்படி மோடி சொன்னார் என்றும் முன்னாள் காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீரில் உச்சக்கட்ட அரசியல் பரபரப்புக்கு மத்தியில் பிகார் மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த சத்தியபால்மாலிக் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நியமித்தது.
இவர், ஆளுநராக பதவிவகித்தபோதுதான் ஜம்மு காஷ்மீர், பல்வேறு அரசியல் கொந்தளிப்புகளை எதிர்கொண்டது. குறிப்பாக, புல்வாமா தாக்குதல், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, இணையம் முடக்கப்பட்ட சம்பவங்கள் சத்யபால் மாலிக் ஆளுநராக பதவி வகித்தபோதுதான் நடந்தது.
அரசியலில் புயலை கிளப்பியுள்ள சத்யபால் மாலிக்:
பின்னர், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதையடுத்து, கோவா மாநில ஆளுநராக சத்யபால்மாலிக் மாற்றப்பட்டார். அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் ஜம்மு காஷ்மீரை கவனித்து கொள்ளும்படி, பிரதமர் மோடி அரசால் நியமிக்கப்பட்ட சத்யபால் மாலிக், தற்போது அரசியலில் புயலை கிளப்பும் விதமாக பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். பிரதமர் மோடிக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள சத்யபால் மாலிக், புல்வாமா தாக்குதல் குறித்து தெரிவித்த கருத்து நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பகிரங்க குற்றச்சாட்டு:
தி வயர் என்ற ஆங்கில செய்தி இணையதளத்திற்கு சத்யபால் மாலிக் அளித்த பேட்டியில், "புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு மத்திய அரசின் குளறுபடியே காரணம் என பிரதமர் மோடியிடம் கூறினேன். ஆனால், என்னை அமைதியாக இருக்கும்படி மோடி சொன்னார்" என்றார்.
கடந்த 2019ஆம் ஆண்டு, புல்வாமாவில் மத்திய ரிசர்வ் காவல் படை மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
புல்வாமா தாக்குதலுக்கு காரணம் யார்?
இந்த சம்பவத்தை தேர்தல் விவகாரமாக பாஜக மாற்றியதாக கூறிய சத்யபால் மாலிக், "தங்கள் ராணுவ வீரர்களை அழைத்து செல்வதற்காக சிஆர்பிஎஃப் விமானத்தை கேட்டது. ஏன் என்றால், இந்த மாதிரியாக பெரிய பாதுகாப்பு வாகனம் சாலை வழியாக செல்லாது. மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அவர்கள் கேட்டார்கள். ஆனால், அதை கொடுக்க மறுத்துவிட்டனர். அவர்கள் (சிஆர்பிஎஃப்) 5 விமானங்களை மட்டுமே கேட்டனர். ஆனால், விமானம் கொடுக்கப்படவில்லை.
பின்னர், உத்தரகாண்டில் உள்ள கார்பெட் தேசிய பூங்காவிற்கு வெளியே இருந்து பிரதமர் என்னை அழைத்தார். அன்று மாலையே பிரதமரிடம் சொன்னேன். இது நம் தவறு என்று. விமானம் கொடுத்திருந்தால் இப்படி நடந்திருக்காது என சொன்னேன். இதை நான் ஏற்கனவே ஓரிரு சேனல்களில் கூறியிருந்தேன்.
அமைதியா இருக்க சொன்ன மோடி:
நான் இப்படி சொன்னதற்கு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் தன்னிடம் இதை தெரிவித்ததாக பிரதமர் மோடி சொன்னார். இதையெல்லாம் சொல்லாதே. அமைதியாக இருக்கவும் என மோடி என்னிடம் கூறினார். பயங்கரவாத தாக்குதலுக்கான பொறுப்பு பாகிஸ்தானுக்கு திருப்பிவிடப்பட்டது என உணர்ந்து, நானும் அமைதியாக இருந்துவிட்டேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இது 100 சதவீதம் உளவுத்துறையின் தோல்வி. 300 கிலோ வெடிமருந்துகளை ஏற்றிய கார் (கான்வாய் மீது மோதிய கார்) குண்டுவெடிப்புக்கு 10-12 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள கிராமங்களைச் சுற்றி வந்தது. இதை யாரும் கண்டுபிடிக்கவில்லை. இவ்வளவு பெரிய அளவிலான வெடிபொருட்கள் பாகிஸ்தானில் இருந்து மட்டுமே வந்திருக்க முடியும். ராணுவ வீரர்கள் உயிரிழப்புக்கு பாதுகாப்பு குளறுபடியே காரணம்" என்றார்.