புதுச்சேரியில் நவம்பர் மாதம் மூன்று கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
புதுச்சேரியில் நவம்பர் மாதம் மூன்று கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அது மாற்றப்பட்டு இரண்டாவது முறையாகப் புதிதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி வரும் நவம்பர் 2, 7 மற்றும் 13-ம் தேதிகளில் மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 17ல் நடக்கிறது.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில் அக்டோபர் 15ம் தேதிக்குள் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற பணிகள் நடந்தன.
அதைத் தொடர்ந்து அக்டோபரில் தேர்தல் மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து கடந்த 2019-ல் பிசி, எஸ்டி ஒதுக்கீடு தொடர்பான அரசாணை ரத்து செய்யப்பட்டது. இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் பழைய தேர்தல் அட்டவணை ரத்து செய்யப்பட்டு புதிய தேர்தல் அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடும் சர்ச்சை நிலவுவதால் செய்தியாளர்கள் சந்திப்பைத் தவிர்த்து விட்டு, மாநிலத் தேர்தல் ஆணையர் தாமஸ் பி. ராய் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள 1,149 பதவிகளுக்கும் (5 நகராட்சித் தலைவர் பதவிகள், 116 நகராட்சி கவுன்சிலர் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள 108 கொம்யூன் பஞ்சாயத்து கவுன்சில் உறுப்பினர், 108 கிராம பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் 812 கிராமப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்) உள்ளாட்சித் தேர்தல் மூன்று கட்டங்களாக நடக்கிறது.
முதல்கட்டமாக புதுச்சேரி நகராட்சி, உழவர்கரை நகராட்சிகளுக்கு வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 11ல் தொடங்கி அக்டோபர்18ல் நிறைவடையும். வரும் நவம்பர் 2ம் தேதி இந்தத் தேர்தல் நடக்கும். இரண்டாம் கட்டமாக அரியாங்குப்பம், பாகூர், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு வேட்பு மனுத் தாக்கல் அக்டோபர் 15ம் தேதி தொடங்கி அக்டோபர் 22ம் தேதி நிறைவடைகிறது. வரும் நவம்பர் 7ம் தேதி இந்தத் தேர்தல் நடக்கும்.
3ம் கட்டமாகக் காரைக்கால் நகராட்சி, மாஹே நகராட்சி, ஏனாம் நகராட்சி மற்றும் கோட்டுச்சேரி, நெடுங்காடு, நிரவி, திருமலைராயன்பட்டினம், திருநள்ளார் ஆகிய கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு வேட்பு மனுத் தாக்கல் அக்டோபர் 22ல் தொடங்கி 29ம் தேதி நிறைவடையும். தேர்தல் நவம்பர் 13ல் நடைபெறும். மூன்றுகட்ட வாக்குப் பதிவுகள் முடிந்த பின் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் 10 லட்சத்து 3 ஆயிரத்து 755 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் இவ்வாறு மாநிலத் தேர்தல் ஆணையர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.