சேதமடைந்து காணப்படும் பிரஞ்சுக்காரர்கள் கட்டிய செல்லிப்பட்டு அணை - மழைநீர் கடலில் கலப்பதால் வேதனை
’’20 கிராமங்களின் நிலத்தடி நீர் உயரவும், விவசாயத்துக்கு உதவும் இந்த அணையை சீர் செய்ய அதிகாரிகளும், அரசும் மறுக்கிறார்கள்’’
செல்லிப்பட்டு படுகை அணை இடியும் தருவாயில் இருப்பதை புதுச்சேரி அரசு கண்டுகொள்ளாததால் மழைநீர் கடலில் கலப்பதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். புதுச்சேரி மற்றும் தமிழக வட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சங்கராபரணி ஆற்றில் புதுச்சேரியில் உள்ள படுகை அணைகள் நிரம்ப தொடங்கின.
அதே சமயத்தில் புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு நூற்றாண்டுகள் பழமையான படுகை அணை இடியும் தருவாயில் உள்ளது. புதுச்சேரி அடுத்த செல்லிப்பட்டு பிள்ளையார் குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே 1906 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சியில் படுகை அணை கட்டப்பட்டது. உரிய பராமரிப்பு இல்லாததால் 2016 ஆம் ஆண்டு பெய்த மழையால் படுகை அணையின் நடுப்பகுதி மற்றும் கீழ்தளம் முற்றிலும் சேதமடைந்தது. அவ்வப்போது மழை காலங்களில் பொதுப்பணித்துறை மூலம் தற்காலிகமாக மணல் மூட்டைகள் அடுக்கி உடைப்பு சரி செய்யப்படும்.
கடந்த டிசம்பரில் செல்லிப்பட்டு படுகை அணையில் தண்ணீர் அழகாக வழிந்தோடும் சுற்றுலா தலமாகவும் மாறியது. அதைத் தொடர்ந்து பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக படுகை அணையில் மேலும் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. பல ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறி கடலில் கலப்பதால் படுகை அணையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில் நூற்றாண்டு பழமையான செல்லிப்பட்டு படுகை அணை சேதமடைந்துள்ளது. பிரெஞ்சுக்காரர்கள் கட்டித்தந்த இந்த அணையை சீர் செய்து தர செல்லிப்பட்டு, பிள்ளையார் குப்பம் உட்பட 20 கிராமத்தினர் அரசிடம் மனு அளித்தோம். மழை காலங்களில் தற்காலிகமாக மணல் மூட்டை அடுக்குகிறார்கள்.
தற்போது 75 சதவீதம் வரை அணை சேதமடைந்து விட்டது. ஆறு மாதம் வரை தேங்கியிருக்க வேண்டிய தண்ணீர் தற்போது வழிந்தோடி விட்டது. 20 கிராமங்களின் நிலத்தடி நீர் உயரவும், விவசாயத்துக்கு உதவும் இந்த அணையை சீர் செய்ய அதிகாரிகளும், அரசும் மறுக்கிறார்கள். அதிக தண்ணீர் வரத்து இருந்தால் இந்த அணை இருக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. அணை உடைந்தால் 20 கிராமங்களில் விவசாயம், குடிநீர் முற்றிலும் பாதிக்கப்படும் என்றனர்.
அதே நேரத்தில் சங்கரா பரணி ஆற்றில் செட்டிப்பட்டு-திருவக்கரை இடையே கட்டப்பட்டுள்ள புதிய படுகை அணை முழுமையாக நிரம்பி வழிகிறது. பருவமழை தீவிரம் அடைவதற்கு முன்பே படுகை அணை நிரம்பியுள்ளதால், செட்டிப்பட்டு, திருவக்கரை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் கூறுகையில், முன்பு படுகை அணை இல்லாததால் தண்ணீர் இல்லாமல் விவசாயிகளும், மக்களும் கஷ்டப்பட்டோம். தற்போதே தண்ணீர் நிரம்பி வழிவதால் நிலத்தடி நீர் மட்டம் பத்து கிராமங்களில் நன்கு உயர்ந்துள்ளது. தடுப்பு அணையை உயர்த்தி தந்தால் இன்னும் பலன் அதிகரிக்கும் என்றனர்.