கரீனா கபூரின் குழந்தைகள் பெயர் என்ன? தேர்வுத்தாளில் விநோத கேள்வி!
பெற்றோர் ஆசிரியர் சங்கம் அளித்த புகாரின் பேரில், காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அலுவலர் சஞ்சீவ் குமார் பலேராவ் தெரிவித்துள்ளார்
மத்தியபிரதேசம் கந்த்வாவில் உள்ள ஒரு தனியார் பள்ளி 6ம் வகுப்பு தேர்வில் கரினா கபூர், சயஃப் அலி கானின் மகன் பெயர் என்ன? என்ற கேள்வி இடம்பெற்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கந்த்வா மாவட்டத்தில் அகாடமிக் ஹைட்ஸ் பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 6ம் வகுப்பு பொது அறிவு குறித்து தேர்வுத் தாளில், கரினா கபூர், சயஃப் அலி கானின் குறித்த கேள்விகளை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, பெற்றோர்கள் பள்ளிக் கல்வித்துறைக்குப் புகார் அளித்தனர்.
பெற்றோர் ஆசிரியர் சங்கம் அளித்த புகாரின் பேரில், காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அலுவலர் சஞ்சீவ் குமார் பலேராவ் தெரிவித்துள்ளார். கல்வி நிர்வாகம் திருப்திகரமான பதில் அளிக்கத் தவறினால், அடுத்தக்கட்ட நடவடிக்கையைத் தொடருவோம் என்றும் தெரிவித்தார்.
பள்ளி வினாத்தாள்களில் இதுபோன்று தொடர்பில்லாத கேள்வி கேட்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. முன்னதாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு முதலாம் பருவத் தேர்வுக்கான ஆங்கில வினாத்தாளில் பெண் விடுதலைக்கு எதிரான சொற்றொடர்கள் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கரீனா கபூர் – சைஃப் அலிகான் ஜோடி காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2016-ஆம் ஆண்டில் தைமூர் அலி கான் என்ற முதல் ஆண் குழந்தை பிறந்தது. இரண்டாவது குழந்தைக்கு ஜெஹாங்கிர் அலி கான் என்ற பெயரை சூட்டி மகிழந்தனர். ஆனால், இந்தியாவை நோக்கிப் படையெடுத்து வந்த தைமூர் பெயரையும், இந்தியாவை ஆண்ட ஜெஹாங்கிர் பெயரை வைத்ததற்கு சில மதவாதிகளும், பிரிவினைவாதிகளும் தொடர்ந்து எதிர்ப்பு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்