(Source: ECI | ABP NEWS)
"நமக்கு அடையாளத்தை கொடுத்ததே அரசியலமைப்புச் சட்டம்தான்" குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி உரை!
காலனித்துவ மனநிலையின் பல எச்சங்கள் நம்மிடையே நீண்ட காலம் இருந்ததாகவும் அதை மாற்ற சமீப காலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

நாட்டின் 76ஆவது குடியரசு தினம், நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றியுள்ளார். சுதந்திரம் பெற்ற பிறகும் கூட நீண்ட காலமாக காலனித்துவ மனநிலை இருந்ததாகவும் ஆனால், ஒருங்கிணைந்த முயற்சிகள் அவை மாற்றப்பட்டுள்ளதாகவும் குடியரசு தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "1947இல் சுதந்திரம் பெற்றோம். ஆனால், காலனித்துவ மனநிலையின் பல எச்சங்கள் நம்மிடையே நீண்ட காலம் நீடித்தன. அண்மைக் காலமாக, அந்த மனநிலையை மாற்றுவதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகளை நாம் காண்கிறோம்.
குடியரசு தலைவர் என்ன பேசினார்?
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றை மாற்றி, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகியவற்றைக் கொண்டு வருவதற்கான முடிவு அத்தகைய முயற்சிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்திய நீதித்துறை மரபுகளின் அடிப்படையில், புதிய குற்றவியல் சட்டங்கள் குற்றவியல் நீதி அமைப்பின் மையத்தில் தண்டனைக்கு பதிலாக நீதி வழங்குவதை வைக்கின்றன. மேலும், புதிய சட்டங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை எதிர்கொள்வதற்கு உயர் முன்னுரிமை அளிக்கின்றன.
இந்த அளவுக்கான சீர்திருத்தங்களுக்கு தொலைநோக்குப் பார்வையின் துணிச்சல் தேவை. நல்லாட்சியின் விதிமுறைகளை மறுவரையறை செய்வதாக உறுதியளிக்கும் மற்றொரு நடவடிக்கை, நாட்டில் தேர்தல் காலத்தை ஒத்திசைவாக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மசோதாவாகும்.
"நாளைய இந்தியாவை வடிவமைக்கப் போகும் இளைஞர்கள்"
'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் நிர்வாகத்தில் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும், கொள்கை முடக்கத்தைத் தடுக்கும், வளங்கள் திசைதிருப்பப்படுவதையும் நிதிச் சுமையையும் குறைக்கும். மேலும் பல நன்மைகளை வழங்கும்.
நமது நாகரீக பாரம்பரியத்துடன் புதிய ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. அந்த பாரம்பரியத்தின் செழுமையின் வெளிப்பாடாக தற்போது நடைபெற்று வரும் மகா கும்பமேளாவைப் பார்க்க முடியும். நமது பாரம்பரியங்கள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பாதுகாக்கவும், புத்துயிர் பெறவும் கலாச்சாரத் துறையில் உற்சாகமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியா சிறந்த மொழிப் பன்முகத்தன்மை கொண்ட மையமாகும். இந்த வளத்தைப் பாதுகாக்கவும், கொண்டாடவும் அசாமி, வங்காளம், மராத்தி, பாலி மற்றும் பிராகிருத மொழிகளை செம்மொழிகளாக அரசு அங்கீகரித்துள்ளது. இந்தப் பிரிவில் ஏற்கனவே தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகியவை இடம்பெற்றுள்ளன. தற்போது 11 செம்மொழிகளில் ஆராய்ச்சியை அரசு தீவிரமாக ஊக்குவித்து வருகிறது.
குஜராத்தின் வாட்நகரில் இந்தியாவின் முதல் தொல்பொருள் அனுபவ அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன், இது கிமு 800 முதல் மனித குடியேற்றத்திற்கான சான்றுகளைக் காட்டும் அகழ்வாராய்ச்சி தளத்திற்கு அருகில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகம் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த பரந்த அளவிலான கலை, கைவினை மற்றும் கலாச்சாரக் கூறுகளை ஒரே இடத்தில் ஒன்றிணைக்கும். நாளைய இந்தியாவை வடிவமைக்கப் போவது நமது இளைய தலைமுறையினர்தான்.
அரசியலமைப்புச் சட்டம் உயிரோட்டமான ஓர் ஆவணமாக மாறியுள்ளது. ஏனெனில் சமூக நல்லொழுக்கங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது தார்மீக வழிகாட்டியின் ஒரு பகுதியாக உள்ளன. இந்தியர்கள் என்ற நமது கூட்டு அடையாளத்தின் உறுதியான அடித்தளத்தை அரசியலமைப்புச் சட்டம் வழங்குகிறது." என்றார்.




















