தீ வைத்து கொளுத்தப்பட்ட காவல்நிலையம்...கலவரத்திற்கு வழிவகுத்த பழங்குடி சிறுமியின் கொடூர கொலை..!
மேற்குவங்க மாநிலம் கலியகஞ்ச் பகுதியில் பழங்குடி சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தலித் பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து வன்முறைகள் நடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது.
தீ வைத்து கொளுத்தப்பட்ட காவல்நிலையம்:
இந்த சூழ்நிலையில், மேற்குவங்க மாநிலம் கலியகஞ்ச் பகுதியில் பழங்குடி சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு வெடித்த வன்முறை அப்பகுதியை உலுக்கியது.
பாதிக்கப்பட்ட பழங்குடி சிறுமியின் உடலை காவல்துறை அதிகாரி தரதரவென இழுத்து சென்ற வீடியோ மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தின் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுமி கொல்லப்பட்டதை கண்டித்து பாஜக நடத்திய போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது.
இதற்கிடையே, மேற்கு வங்கத்தில் சிறுமி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையம் ஒன்றுக்கு மக்கள் தீ வைத்தனர். அதுமட்டும் இன்றி காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் கல் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். நகரத்தில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் லத்தி சார்ஜ் மேற்கொள்ள வேண்டியிருந்தது.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை:
மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வன்முறையைத் தூண்டியதாக பாஜக மீது குற்றம் சாட்டியது. மேலும், "இது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு எனக் கூறி அப்பாவி மக்களின் கோபத்தைத் தூண்டுவதாக பாஜக மீது" குற்றம் சாட்டியுள்ளது. பிரேதப் பரிசோதனையில், விஷப் பொருட்கள் உட்கொண்டதால் மரணம் நிகழ்ந்ததாக மேற்கு வங்க போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியகஞ்ச் நகரில் உள்ள குளத்தின் கரையில் வெள்ளிக்கிழமை காலை சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சம்பவத்தை விளக்கியுள்ள காவல்துறை தரப்பு, "உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தின் கங்குவா கிராமத்தில் வசிக்கும் சிறுமி, வியாழன் மாலை டியூஷனுக்குச் சென்றபோது காணாமல் போனார். உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் அவரது குடும்பத்தினரால் இரவு முழுவதும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை" என தெரிவித்தனர்.
பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா, இது தொடர்பாக வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், சில போலீஸ் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரின் உடலை இழுத்துச் செல்வதைக் காண முடிந்தது. மைனர் பெண் ராஜ்போங்ஷி சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் அமித் மால்வியா குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மகளிர் ஆணையம் (NCW), இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டு மேற்கு வங்க காவல்துறை இந்த விவகாரத்தில் தலையிட்டு நியாயமான விசாரணையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.