புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல்: மீனவர்களுக்கு வீச்சு அரிவாள் செய்து கொடுத்த 6 பேர் கைது
’’32 வீச்சு அரிவாள்கள், வெல்டிங் எந்திரம், 2 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல்’’
புதுச்சேரி நல்லவாடு மீனவருக்கு பயங்கர ஆயுதங்கள் தயார் செய்து கொடுத்த இரும்பு பட்டறை உரிமையாளர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். உள்ளாட்சி தேர்தலையொட்டி புதுச்சேரி, கடலூர் சாலையில் நோணாங்குப்பம் படகுகுழாம் பகுதியில் அரியாங்குப்பம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மடக்கி, சோதனை செய்தனர். அதில் பத்துக்கும் மேற்பட்ட வீச்சு அரிவாள்கள், கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதனை பறிமுதல் செய்த போலீசார், மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் முருங்கப்பாக்கத்தை சேர்ந்த ராஜேஷ் (24), கொம்பாக்கம் வெல்டிங் பட்டறை உரிமையாளர் கருணைதாஸ் (25) என்பது தெரியவந்தது. நல்லவாடு மீனவர் கிராமத்தை சேர்ந்த சுகுமார் என்பவர் ராஜேஷ் மூலம் கருணைதாசிடம் 80 வீச்சரிவாள்கள் தயார் செய்ய முன்பணம் கொடுத்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு போலீசார் சிரஞ்சீவி, வேல்முருகன், மார்ஸ் அருள்ராஜ், உதயகுமார், ராஜேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் கொம்பாக்கம் இரும்பு பட்டறைக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பட்டறை ஊழியர் அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்த ஜெயசூர்யா (19), லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் ஜாக்பால் (19), குமரகுருபள்ளம் அஜீத் (22), முதலியார்பேட்டை சிவா விஷ்ணு நகர் மணிகண்டன் (21) ஆகியோரை சுற்றிவளைத்து பிடித்தனர். மேலும் ஆயுதங்கள் தயார் செய்த இரும்பு பட்டறைக்கு போலீசார் சீல் வைத்தனர். அங்கிருந்து 32 வீச்சு அரிவாள்கள், வெல்டிங் எந்திரம், 2 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ஆயுதங்கள் தயார் செய்ததாக கைது செய்யப்பட்ட ராஜேஷ், பட்டறை உரிமையாளர் கருணைதாஸ் உள்பட 6 பேர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீராம்பட்டினம், நல்லவாடு, வம்பாகீரப்பாளையம் ஆகிய மீனவர் கிராமங்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு இரும்பு பட்டறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சுளுக்கிகளை தயார் செய்ததாக வீராம்பட்டினத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். தற்போது நல்லவாடு மீனவர்களுக்கு ஆயுதங்கள் தயார் செய்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்தடுத்து மீனவர்களிடம் இருந்து மொத்த மொத்தமாக ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது புதுவையில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி நல்லவாடு மீனவருக்கு பயங்கர ஆயுதங்கள் தயார் செய்து கொடுத்த இரும்பு பட்டறை உரிமையாளர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் வீராம்பட்டினம், நல்லவாடு, வம்பாகீரப்பாளையம் ஆகிய மீனவர் கிராமங்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு இரும்பு பட்டறையில் நூற்றூக்கும் மேற்பட்ட சுளுக்கிகளை தயார் செய்ததாக வீராம்பட்டினத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். தற்போது நல்லவாடு மீனவர்களுக்கு ஆயுதங்கள் தயார் செய்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்தடுத்து மீனவர்களிடம் இருந்து மொத்த மொத்தமாக ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.