PMEGP Scheme Details: ரூ.50 லட்சம் கடன், 35% மானியம்- தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு; என்ன தகுதி? முழு விவரம்!
PMEGP Loan Scheme Details in Tamil: 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு தனிநபரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். திட்டங்களுக்கு குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.

பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு 50 லட்சம் வரை கடன் வழங்கப்பட உள்ளது. இதில் 35 சதவீத அளவுக்கு மானியம் அளிக்கப்பட உள்ளது.
பிஎம்இஜிபி என்பது பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் ஆகும். இது விவசாயம் அல்லாத துறையில் குறு நிறுவனங்களை நிறுவுவதன் மூலம் சுய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பெரிய கடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டமாகும்.
தேசிய அளவில் ஒருங்கிணைப்பு முகமையாக செயல்படும் காதி மற்றும் கிராமப்புற தொழில் ஆணையத்தால் (கே.வி.ஐ.சி) இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாநில அளவில், இத்திட்டம் மாநில கேவிஐசி இயக்குநரகங்கள், மாநில காதி மற்றும் கிராமத் தொழில்துறை வாரியங்கள் (கேவிஐபி), மாவட்டத் தொழில்துறை மையங்கள் (டிஐசி) மற்றும் வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு தனிநபரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். உற்பத்தித் துறையில் ரூ. 10 லட்சத்திற்கு மேல் தேவைப்படும் திட்டங்களுக்கு குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி அவசியம். அதற்குக் குறைவான பணம் தேவைப்படும் திட்டங்களுக்கு 8ஆம் வகுப்புக்குக் கீழ் படித்திருந்தாலே போதும்.
குறு நிறுவனங்களை உருவாக்க உற்பத்தித் துறையில் குறு நிறுவனங்களுக்கான மொத்தத் திட்டத் தொகை 50 லட்சம் ரூபாய் ஆகும். இதுவே வணிகம்/ சேவைத் துறையில், இது 20 லட்சம் ரூபாயாக வழங்கப்படுகிறது.
யார் யாருக்கு எவ்வளவு கடன்?
இதில் பொதுப் பிரிவினர்- நகரத்தைச் சேர்ந்தவர்களுக்கு திட்டத்தின் மொத்தத் தொகையில் 15 சதவீத மானியமும், கிராமப்புற பயனாளிகளுக்கு 25 சதவீத மானியமும் அளிக்கப்பட உள்ளது.
எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், வடக்கு பிராந்தியம், மலை மற்றும் எல்லைப் பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சிறப்புப் பிரிவினருக்கு கூடுதல் மானியம் அளிக்கப்படுகிறது.
இந்தப் பிரிவில் நகரத்தைச் சேர்ந்தவர்களுக்கு திட்டத்தின் மொத்தத் தொகையில் 25 சதவீத மானியமும், கிராமப்புற பயனாளிகளுக்கு 35 சதவீத மானியமும் அளிக்கப்பட உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
- இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் பிஎம்இஜிபி பி. இ-போர்ட்டல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- பயனர்கள் http://www.kviconline.gov.in/pmegpeportal/jsp/pmegponline.jsp என்ற இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
- https://www.kviconline.gov.in/pmegpeportal/jsp/offlineform.html என்ற இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- இத்திட்டத்தைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, பயனாளிகள் அருகிலுள்ள கேவிஐசி/ கேவிஐபி/ டிஐசி அலுவலகங்களையும் வலைத்தளத்தையும் தொடர்பு கொள்ளலாம்.
கூடுதல் தகவல்களுக்கு: https://msme.gov.in/1-prime-ministers-employment-generation-programme-pmegp என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
விரிவான விவரங்களுக்கு: https://www.kviconline.gov.in/pmegpeportal/pmegphome/index.jsp






















