PM Modi: எங்கும் ராம மயம்..! வருகைப் பதிவில் ”ஜெய் ஸ்ரீராம்” எழுதிய பிரதமர் மோடி - புகைப்படம் வைரல்
PM Modi: நாஷிக்கில் உள்ள கங்கா கோதாவரி சங்கத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள வருகைப் பதிவில், ஜெய் ஸ்ரீராம் என எழுதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
PM Modi: மகாராஷ்டிராவிற்கு ஒரு நாள் பயணமாக சென்ற பிரதமர் மோடி ரோட் ஷோ நடத்தியதோடு, கோதாவரி கரையோரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற காலாராம் கோயிலுக்கும் சென்றார்.
மகாராஷ்டிரா சென்ற பிரதமர் மோடி:
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும் பிரதமர் மோடி நேற்று மகாராஷ்டிரா சென்றார். அப்போது, காரில் நின்றபடி ரோட் ஷோ நடத்தி, பொதுமக்களை நோக்கி கையசைத்தவாறு பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தின் ஒரு பகுதியாக, கோதாவரி கரையோரம் உள்ள கலாராம் கோயிலுக்கு சென்றார். அங்கு பல்வேறு பூஜைகளை செய்து இறைவழிபாட்டிலும் ஈடுபட்டார்.
”ஜெய் ஸ்ரீராம்” எழுதிய பிரதமர் மோடி:
கோயிலுக்கு அருகே உள்ள கங்கா கோதாவரி பஞ்ச்கோடி புரோகிதர் அலுவலகத்திற்கும் சென்றார். அங்குள்ள பார்வையாளர்களின் வருகைப்பதிவில், ”ஜெய் ஸ்ரீராம்” என எழுதிய பிரதமர் மோடி தனது கையெழுத்தையும் பதிவு செய்தார். இந்நிலையில், பிரதமர் மோடி பார்வையாளர் வருகைப்பதிவில் எழுதிய “ஜெய் ஸ்ரீராம்” தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ள அயோத்யா ராமர் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, பிரதமர் மோடி 11 நாட்கள் சிறப்பு விரதைத்தை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் தான் வருகைப்பதில் பிரதமர் மோடி ஜெய் ஸ்ரீராம் என எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் நீளமான பாலம்:
இதனிடையே, மும்பையில் உள்ள செவ்ரி-நவ ஷேவா பகுதிகளை இணைக்கும் அடல் சேது என்ற பாலத்தை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். 17 ஆயிரத்து 840 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், நாட்டின் மிக நீளமான கடல் பாலமாக இறுதி வடிவம் பெற்றுள்ளது. 2016ம் ஆண்டு டிசம்பரில் பிரதமர் மோடி இந்த பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார். அடல் சேது என்பது மும்பையில் உள்ள செவ்ரி மற்றும் ராய்காட் மாவட்டத்தில் உள்ள நவா ஷேவா பகுதியை இணைக்கும் 21.8 கிலோமீட்டர் நீளமுள்ள பாலமாகும். இதனால் வழக்கமாக இரண்டு மணிநேரம் ஆகும் இந்த இரண்டு பகுதிகளுக்கு இடையேயான பயணம் தற்போது 20 நிமிடங்களாக குறைந்துள்ளது.
ராமர் கோயில் குடமுழுக்கு:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்யாவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள, ராமர் கோயில் குடமுழுக்கு வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. கோயில் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிர்ஷ்டை செய்யும் இந்த நிகழ்வில், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், சாதுக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொள்ள இருக்கின்றனர். இதற்காக உத்தரபிரதேச மாநிலமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இதைமுன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.