Longest Sea Bridge: இந்தியாவின் புதிய அடையாளம் : நாட்டின் நீளமான கடல் பாலம், ரூ.17,840 கோடி, 21.8 கி.மீ., என்ன இருக்கு?
Longest Sea Bridge: மும்பையில் கட்டப்பட்டுள்ள நாட்டின் நீளமான கடல் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.
Longest Sea Bridge: மும்பையில் 17 ஆயிரத்து 840 கோடி ரூபாய் செலவில் 21.8 கிலோ மீட்டருக்கு, நாட்டின் நீளமான கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது.
நாட்டின் நீளமான கடல் பாலம்:
அடல் பிஹாரி வாஜ்பாய் செவ்ரி-நவ ஷேவா அடல் சேது என்ற பெயரில் மும்பையில் பெயரிடப்பட்டுள்ள பாலத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். மும்பை டிரான்ஸ் துறைமுகத்தை இணைக்கும் இந்த பாலமானது 17 ஆயிரத்து 840 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இது நாட்டின் மிக நீளமான கடல் பாலமாக இறுதி வடிவம் பெற்றுள்ளது. 2016ம் ஆண்டு டிசம்பரில் பிரதமர் மோடி இந்த பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் வரலாற்று மைல்கல்லைக் குறிக்கும் நேரத்தில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு மரியாதை அளிக்கும் வகையில் அடல் சேது என பாலத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. அடல் சேது என்பது மும்பையில் உள்ள செவ்ரி மற்றும் ராய்காட் மாவட்டத்தில் உள்ள நவா ஷேவா பகுதியை இணைக்கும் 21.8 கிலோமீட்டர் நீளமுள்ள பாலமாகும்.
நிமிடங்களாக குறைந்த பயணம்:
நாட்டின் மிக நீளமான பாலத்தின் உதவியுடன், செவ்ரி-நவ ஷேவா ஆகிய இரண்டு இடங்களுக்கு இடையேயான பயணம், இரண்டு மணிநேரத்தில் இருந்து சுமார் 15-20 நிமிடங்களாக குறைய உள்ளது. இந்த பாலத்தில் பயன்படுத்தப்படும் விளக்குகள் நீர்வாழ் சூழலுக்கு இடையூறு ஏற்படுத்தாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள வேறு எந்தவொரு கடல் பாலத்திலும் பயன்படுத்தப்படாத தொழில்நுட்பங்கள், இந்த பாலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பாலத்தின் மீது அனுமதிக்கப்படுவது?
- மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பில் (MTHL) நான்கு சக்கர வாகனங்களுக்கான அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 100 கி.மீ.
- கார்கள், டாக்சிகள், இலகுரக மோட்டார் வாகனங்கள், மினி பேருந்துகள் மற்றும் டூ ஆக்சில் பஸ்கள் போன்ற வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 100 கிலோமீட்டர்
- பாலத்தின் மீது ஏறும்போதும், இறங்கும் போது, வேகம் மணிக்கு 40 கிலோமீட்டராக கட்டுப்படுத்தப்படும்
பாலத்தில் செல்ல யாருக்கு அனுமதி இல்லை?
- கடல் பாலத்தில் மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் டிராக்டர்கள் அனுமதிக்கப்படாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள்கள், மொபெட்கள், மூன்று சக்கர வண்டிகள், விலங்குகள் இழுத்துச் செல்லும் வாகனங்கள் மற்றும் மெதுவாக நகரும் வாகனங்கள் போன்ற வாகனங்களுக்கும் நுழைவு இல்லை.
- மும்பை நோக்கி செல்லும் மல்டி ஆக்சில் கனரக வாகனங்கள், டிரக்குகள் மற்றும் பேருந்துகள் கிழக்கு ஃப்ரீவேயில் நுழைய முடியாது.
- இந்த வாகனங்கள் மும்பை போர்ட்-செவ்ரி வெளியேறும் பாதையை (வெளியேறு 1C) எடுத்து, தொடர்ந்து 'காடி அடா' அருகே MBPT சாலையைப் பயன்படுத்த வேண்டும்.
இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தில் "ஆபத்து, இடையூறுகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை" தடுக்க வேக வரம்பை விதித்துள்ளதாக காவல்துறை விளக்கமளித்துள்ளது.