PM Modi: திரிபுரா,மேகாலயா, நாகாலாந்து முதலமைச்சர்கள் பதவி ஏற்பு விழா.. சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி..!
மூன்று வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில், வடகிழக்கில் அமைந்துள்ள திரிபுராவில் பிப்ரவரி 16ஆம் தேதியும் மேகாலயா நாகாலாந்தில் பிப்ரவரி 27ஆம் தேதியும் நடைபெற்றது. அதற்கான முடிவுகள், மார்ச் 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
எந்த மாநிலத்தில் யார் ஆட்சி?
திரிபுராவை பொறுத்தவரையில், பாஜக தனித்து ஆட்சி அமைக்க உள்ளது. நாகாலாந்தில் கூட்டணி கட்சியான தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியுடன் இணைந்து பாஜக ஆட்சி அமைக்கிறது. மேகாலயாவில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பாஜகவின் உதவியோடு தேசிய மக்கள் கட்சி ஆட்சி அமைக்கிறது.
நாகாலாந்தின் முதலமைச்சராக நைபியு ரியோவும் மேகாலயா முதலமைச்சராக கான்ராட் சங்மாவும் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளனர். திரிபுராவில் தற்போதைய முதலமைச்சரான மாணிக் சாஹா, மத்திய இணை அமைச்சர் பிரதிமா பவுமிக் ஆகியோருக்கு இடையே முதலமைச்சர் பதவி பெறுவதில் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.
முதலமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி:
இந்நிலையில், மூன்று வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். வரும் மார்ச் 7ஆம் தேதி, நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகளின் பதவியேற்பு விழாக்களில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மறுநாள் திரிபுராவில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கிறார்.
மூன்று வடகிழக்கு மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் சிறப்பான செயல்பாடு ஜனநாயகம் மற்றும் ஜனநாயக செயல்பாட்டின் மீது மக்கள் வைத்திருக்கும் உறுதியான நம்பிக்கையை காட்டுகிறது என மூன்று மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மார்ச் 2 அன்று டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் பிரதமர் மோடி பேசியிருந்தார்.
வடகிழக்கு தேர்தல் முடிவுகளை விரிவாக எடுத்து கூற வேண்டுமானால், இப்பகுதி டெல்லியில் இருந்தும் சரி எங்கள் இதயத்திலிருந்து சரி தொலைவில் இல்லை என்பதைக் காட்டுகிறது.
தொண்டர்களின் கடின உழைப்பு:
இந்த மூன்று வடகிழக்கு மாநிலங்களில் பாஜக பெற்ற வெற்றிக்கு தொண்டர்கள் செய்த கடின உழைப்பு காரணம். வடகிழக்கில் உள்ள எங்கள் கட்சித் தொண்டர்கள் இங்குள்ள அனைவரையும் விட மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். அவர்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்" என்றார்.
திரிபுரா, ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக கருதப்பட்ட மாநிலம். 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட்களின் ஆட்சியை கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் வெற்றி மூலம் பாஜக முடிவுக்கு கொண்டு வந்தது. அந்த தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணியை முதல்முறையாக தோற்கடித்து பாஜக ஆட்சி அமைத்தது.