லண்டனில் இருந்துகொண்டு இந்திய ஜனநாயகத்தை பற்றி கேள்வி எழுப்புவதா? கொந்தளித்த பிரதமர் மோடி..!
ரூபாய் 8 ஆயிரத்து 480 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையை இன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்.
வரும் மே மாதம், கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இச்சூழலில், பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி அம்மாநிலத்திற்கு சென்றுள்ளார். அந்த வகையில், பெங்களூர் – மைசூர் வரையிலான 118 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
ரூபாய் 8 ஆயிரத்து 480 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையை இன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். பின்னர், பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக சாடினார்.
இந்தியா மீதான தாக்குதல்:
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி ஆற்றிய உரைக்கு பதிலடி தந்த மோடி, "இந்திய ஜனநாயகம் பற்றிய அவரின் கருத்துக்கள் கர்நாடகா, இந்தியா மற்றும் கடவுள் மீதான தாக்குதலாகும். லண்டன் மண்ணில் இருந்து இந்திய ஜனநாயகத்தின் மீது கேள்விகள் எழுப்பப்படுவது துரதிர்ஷ்டவசமானது.
இவர்கள் பகவான் பசவேஸ்வரரையும், கர்நாடக மக்களையும், இந்திய மக்களையும் அவமதிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து கர்நாடகம் விலகி இருக்க வேண்டும்.
சரமாரியாக குற்றம்சாட்டிய மோடி:
முழு உலகமும் இந்த ஜனநாயக முறையைப் பற்றி படித்து வருகிறது. இந்தியா மிகப்பெரிய ஜனநாயகம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாய் என்று நாம் சொல்லக்கூடிய இதுபோன்ற பல விஷயங்கள் உள்ளன. இந்திய ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் எந்த சக்தியும் இல்லை. ஆனால், அதையும் மீறி இந்திய ஜனநாயகத்தை தாக்க சிலர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்" என்றார்.
முன்னதாக, லண்டனில் இந்திய பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களிடம் கலந்துரையாடிய ராகுல் காந்தி, பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனாவின் அச்சுறுத்தலை புரிந்து கொள்ளவில்லை என குற்றம்சாட்டினார்.
இந்திய எல்லை பகுதியில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்தது குறித்து பேசிய அவர், "இந்திய எல்லைக்குள் யாரும் நுழையவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது, மீண்டும் அப்படி செய்யலாம் என்று சீனர்களுக்கு விடுக்கும் அழைப்பாகும்.
இந்திய வெளியுறவுக் கொள்கையை ஆதரிக்கிறேன். ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எனக்கு பெரிய கருத்து வேறுபாடு இல்லை. இந்திய வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்த வரையில், நான் இந்திய வெளியுறவுக் கொள்கையை ஆதரிக்கிறேன். அதுவே, எனக்கு சரி எனப்படுகிறது. எனக்கு, அதில் பெரிய கருத்து வேறுபாடு இல்லை" என்றார்.
இதையும் படிக்க: Naatu Naatu Song Oscar: ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா... முக்கிய கோரிக்கை விடுத்த ஆர்ஆர்ஆர் படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி..!