PM Modi : "அரசியலில்தான் சண்டையெல்லாம்” : எதிர்கட்சி தலைவர்களுடன் காபியும், சிரிப்பும்.. பிரதமர் மோடி கிளிக்ஸ்
ஜி20 உச்சி மாநாடு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர்கள் உடன் பிரதமர் மோடி உரையாடியது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
ஜி20 அமைப்பு:
உலகின் முக்கியமான வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உறுப்பினராக கொண்ட ஜி20 அமைப்பில், இந்தியா உடன் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, தென்அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட 19 நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. உலக மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கை கொண்டிருக்கும் ஜி20 அமைப்பில் உள்ள நாடுகள், உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் 85% பங்களிப்பை வழங்குகின்றன. இதைத்தவிர உலக வர்த்தகத்தில் 75 பங்களிப்பையும் செய்வதால், ஜி20 அமைப்பு சர்வதேச அளவில் அதிகாரம் மிகுந்த அமைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பெரும் அமைப்பிற்கான ஓராண்டிற்கான தலைமை பொறுப்பை கடந்த 1-ந்தேதி முதல் இந்தியா வகித்து வருகிறது. இந்நிலையில் ஜி20 அமைப்பின் அடுத்த உச்சி மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10-ந்தேதிகளில் டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
எதிர்க்கட்சிகள் உடனான ஆலோசனைக்கூட்டம்:
இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் வகையில், அதற்கான திட்டமிடலுக்காக 200-க்கும் மேற்பட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதில் முக்கியமாக 'ஜி20' உச்சி மாநாடு தொடர்பாக நாட்டின் அரசியல் கட்சித்தலைவர்களின் ஆலோசனைகளை பெறவும், ஆலோசனை நடத்தி உத்திகளை இறுதிசெய்யவும் வசதியாக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர்கள்:
எதிர்க்கட்சிகளை சேர்ந்த, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சிக்கிம் முதலமைச்சர் பிரேம்சிங் தமங் ஆகியோருடன், பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிகளும் பங்கேற்றனர். தொடர்ந்து, ஜி20 மாநாடு தொடர்பான, தங்களது கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.
எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி:
ஆலோசனை கூட்டத்திற்குப் பின், பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து மனமகிழ்ச்சியுடன் பேசி, சிரித்தவாறு தேநீரை பகிர்ந்து கொண்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. குறிப்பாக எதிர்க்கட்சிகள் என்பதை தாண்டி எதிரிகட்சிகளை போன்று ஒவ்வொரு மேடையிலும், மாறி மாறி கடுமையாக சாடும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் இடதுசாரி தலைவர் சீதாராம் யெச்சூரி ஆகியோருடனும் மகிழ்ச்சியுடன் பிரதமர் மோடி பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.