"காங்கிரஸின் அட்டூழியங்களை இனியும் சகித்து கொள்ள முடியாது" பிரதமர் மோடி சரவெடி பேச்சு
சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை சேர்தல் நடத்தப்பட உள்ளது.
பாஜகவின் கோட்டையாக இருந்த சத்தீஸ்கரில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் இருந்து சில பகுதிகளை பிரித்து உருவாக்கப்பட்ட மாநிலம்தான் சத்தீஸ்கர். மாநிலம் உருவாக்கப்பட்டு முதல் மூன்று ஆண்டுகள் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அங்கு நடைபெற்றது.
சத்தீஸ்கர் அரசியல் நிலவரம்:
2003ஆம் ஆண்டுக்கு பிறகு, 2018ஆம் ஆண்டு வரை, பாஜகவின் கோட்டையாக இருந்தது. தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்று பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 15 ஆண்டுகளுக்கு பிறகு, சத்தீஸ்கரில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்.
காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேஷ் பாகல் தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இச்சூழலில், சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை சேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இழந்த ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜக தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், சத்தீஸ்கர் சென்றுள்ள பிரதமர் மோடி, பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சத்தீஸ்கர் மக்கள் மாற்றத்திற்கு தயாராகிவிட்டதாகவும் காங்கிரஸின் கொடுமைகளை இனியும் சகித்து கொள்ள முடியாது என்றும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
"மாற்றத்திற்கு தயாரான சத்தீஸ்கர்"
விரிவாக பேசிய அவர், "சத்தீஸ்கரில் மாற்றம் நிகழ்வது இறுதியாகிவிட்டது. இங்கு காணப்படும் பரபரப்பு மாற்றத்தின் பிரகடனமாகும். காங்கிரஸின் அட்டூழியங்களை சத்தீஸ்கர் மக்கள் இனியும் சகித்துக் கொள்ள மாட்டார்கள். நீங்கள் (சத்தீஸ்கர் மக்கள்) அனைவரும் காங்கிரஸை ஆட்சியில் இருந்து அகற்றி, பாஜகவைக் கொண்டு வரத் தயாராக உள்ளீர்கள்.
சத்தீஸ்கர் ஊழல் மற்றும் தவறான ஆட்சியால் மூழ்கியுள்ளது. ஒவ்வொரு திட்டத்திலும் ஊழல் நடக்கிறது. உங்கள் கனவுகளுக்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். இங்கு பாஜக ஆட்சி அமைந்தால்தான் உங்கள் கனவுகள் நிறைவேறும். டெல்லியில் இருந்து நாம் எத்தனை முயற்சிகளை மேற்கொண்டாலும், அந்த முயற்சிகளை இங்குள்ள காங்கிரஸ் தோல்வியடையச் செய்கிறது.
பணப்பற்றாக்குறை இல்லை:
கடந்த ஐந்தாண்டுகளில் சத்தீஸ்கருக்கு இங்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கிடைத்தது. சாலைகள், ரயில்கள், மின்சாரம் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் நாங்கள் அரசுக்கு எந்தப் பணப் பற்றாக்குறையையும் வைத்திருக்கவில்லை. பொதுக்கூட்டம் ஒன்றில் துணை முதலமைச்சரே இதை ஒப்பு கொண்டார்.
காங்கிரஸ் ஆட்சியில் ரயில்வேக்கு 300 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தார்கள். ஆனால், இந்த ஆண்டு 6000 கோடி ரூபாயை பா.ஜ.க. அரசு ஒதுக்கியுள்ளது. இது 'மோடி மாடல்'. இது சத்தீஸ்கர் மீதான என் காதலை வெளிப்படுத்துகிறது. இது சத்தீஸ்கரின் வளர்ச்சிக்கான எனது அர்ப்பணிப்பை குறிக்கிறது. ரயில் தண்டவாளங்களை விரைவில் மின்மயமாக்க முயற்சிக்கிறோம். சத்தீஸ்கருக்கு நவீன வந்தே பாரத் ரயிலைக் கொடுத்தது பாஜக தான்" என்றார்.