"ரத்தம் கொதிக்குது.. மனசு வலிக்குது" ஆக்ரோஷமாக பேசிய பிரதமர் மோடி
ஒவ்வொரு இந்தியரின் ரத்தமும் கொதிக்கிறது என்றும் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தங்கள் சொந்தத்தை இழந்தவர்களின் வலியை ஒவ்வொரு இந்தியரும் உணர்கிறார்கள் என்றும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பஹல்காம் தாக்குதல் குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "ஒவ்வொரு இந்தியரின் ரத்தமும் கொதிக்கிறது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தங்கள் சொந்தத்தை இழந்தவர்களின் வலியை ஒவ்வொரு இந்தியரும் உணர்கிறார்கள்" என தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடியான நேரத்தில் நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் ஆக்ரோஷமாக பேசிய பிரதமர் மோடி:
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். இது, இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதத்தின் எஜமானர்களின் விரக்தியையும் கோழைத்தனத்தையும் காட்டுகிறது. காஷ்மீரில் அமைதி திரும்பிக் கொண்டிருந்தது.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் துடிப்பு இருந்தது. வளர்ச்சிப் பணிகளில் முன்னெப்போதும் இல்லாத வேகம் இருந்தது. ஜனநாயகம் வலுவடைந்து வந்தது. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சாதனை படைக்கப்பட்டது. வருமானம் அதிகரித்து வந்தது. இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகி வந்தன. நாட்டு மக்களுக்கும் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கும் எதிரிகளாக இருப்பவர்களுக்கு இது பிடிக்கவில்லை.
"பயங்கரவாதத்திற்கு எதிரான போர்"
பஹல்காம் தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் வேதனைப்படுத்தியுள்ளது. அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அவர்கள் பேசும் மொழி எதுவாக இருந்தாலும் சரி. அவர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. பயங்கரவாத தாக்குதலின் படங்களைப் பார்க்கும்போது ஒவ்வொரு இந்தியரின் ரத்தமும் கொதிக்கிறது என்று நான் உணர்கிறேன்.
துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கிடைக்கும். பயங்கரவாதிகளும் அவர்களின் எஜமானர்களும் காஷ்மீரை அழிக்க விரும்புவதால் இந்த சதித்திட்டத்தை தீட்டினர்.
"There is a deep agony in my heart. The April 22 terror attack in Pahalgam has left every citizen heartbroken. Every Indian feels deep sympathy for the families of the victims," says PM Modi (@narendramodi) in 'Mann Ki Baat'. pic.twitter.com/SZmBj2dBON
— Press Trust of India (@PTI_News) April 27, 2025
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போரில் 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமை மிகப்பெரிய பலமாகும். இந்த ஒற்றுமைதான் பயங்கரவாதத்திற்கு எதிரான நமது தீர்க்கமான போரின் அடிப்படை. இந்த சவாலை எதிர்கொள்ள நமது கொள்கைகளை வலுப்படுத்த வேண்டும். ஒரு தேசமாக நமது மன உறுதியைக் காட்ட வேண்டும். நாடு எவ்வாறு ஒரே குரலில் பேசுகிறது என்பதை முழு உலகமும் கவனித்துக் கொண்டிருக்கிறது" என்றார்.




















