Modi Meet Zelenskyy: ரஷிய போருக்கு பிறகு உக்ரைன் அதிபரை முதல்முறையாக சந்தித்த பிரதமர் மோடி..! சந்திப்பில் நடந்தது என்ன?
கடந்தாண்டு பிப்ரவரி மாதம், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்க தொடங்கியதிலிருந்து முதல்முறையாக, இருநாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து கொள்கின்றனர்.
![Modi Meet Zelenskyy: ரஷிய போருக்கு பிறகு உக்ரைன் அதிபரை முதல்முறையாக சந்தித்த பிரதமர் மோடி..! சந்திப்பில் நடந்தது என்ன? PM Modi Meets Ukraine President Zelenskyy For First Time Since Russia Invasion know more details Modi Meet Zelenskyy: ரஷிய போருக்கு பிறகு உக்ரைன் அதிபரை முதல்முறையாக சந்தித்த பிரதமர் மோடி..! சந்திப்பில் நடந்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/20/b7a45e83799fded67ff6d756b19dbbf31684577751789729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜப்பான் ஹிரோஷிமாவில் நடந்து வரும் ஜி7 உச்ச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை இன்று சந்தித்துள்ளார். கடந்தாண்டு பிப்ரவரி மாதம், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்க தொடங்கியதிலிருந்து முதல்முறையாக, இருநாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து கொள்கின்றனர்.
ஜி7 உச்சி மாநாடு:
இதற்கு முன்பு, இருவரும் இணையம் வழியாக பேசியுள்ளனர். மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஜி7 மாநாட்டின் மூன்று அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று காலை ஜப்பான் புறப்பட்டு சென்றார். பின்னர், ஜப்பான் செய்தித்தாள் யோமியுரி ஷிம்புனுக்கு அளித்த பேட்டியில், பிரதமர் மோடியிடம் பல்வேறு முக்கிய கேள்விகள் எழுப்பப்பட்டது.
உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பு குறித்தும், ஐநா தீர்மானங்களுக்கு வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்தது குறித்தும், ரஷியாவிலிருந்து வரும் எண்ணெய் இறக்குமதியை அதிகரித்திருப்பது குறித்தும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த பிரதமர் மோடி:
அதற்கு பதில் அளித்து பேசிய பிரதமர் மோடி, "சச்சரவுகளை பேச்சுவார்த்தையின் மூலமாகவும் ராஜதந்திர ரீதியாகவும் தீர்க்க வேண்டும் என இந்தியா வலியுறுத்துகிறது. அத்தியாவசியப் பொருட்களின் உயரும் செலவுகளால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ரஷிய படையெடுப்பைக் கண்டிக்கும் ஐநா பொதுச் சபை தீர்மானங்களை இந்தியா புறக்கணித்திருந்தாலும், ஐநா சாசனம், சர்வதேச சட்டம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை நிலைநிறுத்துவதில் உறுதியாக உள்ளது.
உக்ரைன் நெருக்கடிக்கு அமைதியான தீர்வை இந்தியா ஆதரிக்கிறது. ஐ.நா.விற்குள்ளும் அதற்கு அப்பாலும் ஆக்கப்பூர்வமாக பங்களிக்க தயாராக உள்ளது" என்றார்.
மாறி, மாறி தடை:
ஜப்பானை தொடர்ந்து, பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு மோடி பயணம் மேற்கொள்ள உள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி அதிபர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, "உக்ரைன் விவகாரத்தில் ராணுவத்தின் வழியாக தீர்வு கிடைக்காது என்றும் எந்த அமைதி முயற்சிகளுக்கும் இந்தியா பங்களிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார். போர் தொடங்கியதில் இருந்து பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதினுடன் பலமுறை பேசியிருக்கிறார்.
உக்ரைன் விவகாரம், உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில், ரஷியாவுக்கு எதிராக அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரஷிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
தற்போது, இதற்கு பதிலடி தந்துள்ள ரஷியா, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்பட 500 அமெரிக்கர்கள் தங்கள் நாட்டில் நுழைய தடை விதித்துள்ளது. இந்த விவகாரத்தில், இந்தியா, தொடர்ந்து நடுநிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)