லத்திகளால் ஐயப்ப பக்தர்கள் வரவேற்கப்பட்டதாக பிரதமர் மோடி வேதனை
" மலர்களால் வரவேற்கப்பட வேண்டிய ஐயப்ப பக்தர்கள் லத்திகளுடன் வரவேற்கப்பட்டுள்ளனர். அவர்கள் குற்றவாளிகள் அல்ல," என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கேரளா சட்டப்பேரவைக்கான தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்தார்.
கேரளாவில் உள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவிற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
பத்தனம்திட்டா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய மோடி," கொடுங்கோன்மை ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் ஒரே குரலில் தங்கள் எதிர்ப்பை காட்டுவது வழக்கம். இதேபோன்ற உணர்வை நான் இப்போது கேரளாவில் காண்கிறேன். பா.ஜ.க.வின் வளர்ச்சி அரசியலை மக்கள் நேரடியாக காண்கின்றனர். அவர்கள் எங்கள் கொள்கைகளுடன் தொடர்புபடுத்தி வருகின்றனர்" என்று தெரிவித்தார்.
மேலும், "படித்தவர்களை மக்கள் அரசியலுக்குள் வருவதை பாஜக முன்னெடுக்கிறது என்பதை மக்கள் பார்க்கிறார்கள். 'மெட்ரோமேன்' ஈ.ஸ்ரீதரன் தவிர அரசியல் அதற்கு சான்றாக உள்ளது. அவர், தனது வாழ்நாளில் மக்களுக்காக அதிக பங்காற்றியவர். இப்போது தனது சமூக சேவைக்காக பாஜகவைத் தேர்ந்தெடுத்துள்ளார்" என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திரமோடி, அஇஅதிமுக-பிஜேபி மற்றும் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவுகோரி உரையாற்றினார். வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ. சிதம்பரனார் உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களையும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்ட பல்வேறு தலைவர்களையும் நினைவுப்படுத்தி பாராட்டு தெரிவித்தார்.
கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் போட்டியிட 2 ஆயிரத்து 180 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றில் ஆயிரத்து 61 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தேசிய தலைவர்களும் பிரசாரத்தில் பங்கேற்று வருகின்றனர்.