Z-plus security for Serum Institute CEO Adar Poonawalla:ஆதார் பூனவாலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் - மும்பை நீதிமன்றத்தில் மனு
கோவிட்ஷீல்ட் தடுப்பூசியை உற்பத்தி செய்யும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி ஆதார் பூனவாலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்க கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் தத்தா மானே தனது மனுவில், " சீரம் நிறுவன செயல் அதிகாரி இதுவரை 15 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை இந்திய அரசுக்கு வழங்கியுள்ளார். இதன்மூலம், கிட்டத்தட்ட இந்திய மக்களில் 2 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி நிர்வகிக்கப்பட்டுள்ளது. மேலும், 98 சதவிகித இந்திய மக்களுக்கு தடுப்பூசியை நிர்வகிக்க இந்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மாநில முதல்வர்களால் மிரட்டப்படுவது அபாயகரமான சமிக்ஞையாக அமையும்" என்று தெரிவித்தார்.
கடந்த வாரம், மத்திய உள்துறை அமைச்சகம் ஆதார் பூனவல்லாவுக்கு "ஒய் பிரிவு" பாதுகாப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தது. இந்தப் பிரிவு பாதுகாப்பின்படி அதார் பூனாவாலா இந்தியாவின் எந்த ஊருக்குச் சென்றாலும் 11 பேர் அடங்கிய குழு அவருக்குப் பாதுகாப்பாக இருக்கும். இதில் இரண்டு கமாண்டோக்கள் மற்றும் ஒரு காவல்துறை அதிகாரியும் அடக்கம்
முன்னதாக, வர்த்தக பயணமாக இங்கிலாந்து நாட்டுக்கு சென்ற அவர் 'தி டைம்ஸ்' பத்திரிகைக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், "தற்போதைய சூழலில் இந்தியாவுக்கு உடனடியாக திரும்பி செல்ல விரும்பில்லை. பாரங்கள் அனைத்தும் எனது தோள்களில் விழுந்துள்ளன. ஆனால், கோவிட்- 19 தடுப்பூசி உற்பத்தியில் எந்தவொரு நிறுவனமும் தனியாக சாதிக்க முடியாது. சில X,Y,Z-ன் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாதால், அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை யூகிக்க முடியாத சூழ்நிலையில் உற்பத்தியில் கவனம் செலுத்துவது இயலாத காரியம்" என்று தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் மிக சக்திவாய்ந்த சிலரிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும் தெரிவித்தார். "கோவிஷீல்ட் தடுப்பூசியை உடனடியாக வழங்கக் கோரி இந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள், வணிக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிற அரசியல் தலைவர்களிடமிருந்து கோரிக்கை வைக்கப்படுகின்றன" என்று தெரிவித்தார்.
தாராளமயமாக்கப்பட்ட விலை நிர்ணயம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட தேசிய கோவிட்-19 தடுப்பூசி வியூகத்தின் கீழ், மே 1-ஆம் தேதிக்குப் பிறகு, 18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. மேலும், தடுப்பூசி உற்பத்தியாளர்கள், தங்களது விநியோகத்தில் 50 சதவீதம் வரை மாநில அரசுகளுக்கும், வெளி சந்தைக்கும், முன்னரே நிர்ணயிக்கப்பட்ட விலையில் வழங்க தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 50 சதவீத தடுப்பு மருந்துகளை இந்திய அரசுக்கு அவர்கள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
இதனையடுத்து, மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை சீரம் நிறுவனம் நிர்ணயித்தது. மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் கோவிஷீல்டு 400 ரூபாய் என்ற அளவிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய் என்ற அளவிலும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்தது.
இது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்ததை அடுத்து, மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை சீரம் நிறுவனம் 100 ரூபாய் குறைத்தது. இதனால் மாநில அரசுகளின் செலவு கணிசமாக குறையும் என்றும் மேலும் பலருக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் அவர்களின் உயிரை பாதுகாக்க முடியும் என்றும் தலைமைச் செயல் அதிகாரி அடர் பூனாவாலா தெரிவித்தார்.
இதற்கிடையே, மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், 11 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்கள் வழங்க சீரம் இந்தியா நிறுவனத்துக்கு 100 சதவீத முன்பணமாக ரூ.1732.50 கோடி ( வரி பிடித்தம் செய்யப்பட்ட பின் ரூ.1699.50 கோடி) ஏப்ரல் 28ம் தேதி வழங்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. அதை அந்நிறுவனம் அன்றே பெற்றுக் கொண்டது. தற்போது வரை, கடந்த முறை கொடுக்கப்பட்ட 10 கோடி டோஸ் ஆர்டரில், 3.5.2021 வரை 8.744 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன .