Air Hostess: விமானத்தில் மீண்டும் சர்ச்சை ..விமான பணிப்பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை எடுக்க முயற்சித்த பயணி ..நடந்தது என்ன?
சமீபத்தில் விமான பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பிரச்னையாக வெடித்தது.
சமீப காலமாக, விமானத்தில் தொடர்ந்து சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பிரச்னையாக மாறி, விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கும் அளவுக்கு சென்றது. இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக விமான பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பிரச்னையாக வெடித்தது.
விமானத்தில் தொடர் சர்ச்சை:
இப்படி, சர்ச்சை மேல் சர்ச்சை வெடித்து வரும் சூழலில், பயணி ஒருவர், விமான பணிப்பெண் மற்றும் சக பயணியின் அந்தரங்க புகைப்படத்தை எடுக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம், டெல்லியில் இருந்து மும்பைக்கு சென்ற விமானத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, டெல்லி காவல்துறைக்கும் விமான போக்குவரத்து இயக்குநரகத்துக்கும் டெல்லி பெண்கள் ஆணையம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. அந்த நோட்டீஸில், "விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் பரப்பப்பட்ட வீடியோவை டெல்லி மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
விமான பணிப்பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை எடுக்க முயற்சித்த பயணி:
கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி, டெல்லியில் இருந்து மும்பைக்கு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
விமானப் பணிப்பெண் மற்றும் சக பெண் பயணியின் அந்தரங்க படங்களை எடுக்க பயணி ஒருவர் முயற்சிப்பதாக வைரலாக பரவி வரும் வீடியோவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பயணியின் செல்போனை சோதனை செய்தபோது, அவரது மொபைலில் விமானத்தில் இருந்த பெண்களின் ஆட்சேபனைக்குரிய படங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரின் நகல், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் விவரங்கள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அடங்கிய விவரங்களை சமர்ப்பிக்குமாறு டெல்லி காவல்துறையை கேட்டு கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி பெண்கள் ஆணையம் அதிரடி:
குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படவில்லை என்றால், அவ்வாறு செய்யாததற்கான காரணத்தை காவல்துறை தெரிவிக்க வேண்டும் என்று டெல்லி பெண்கள் ஆணையம் கூறியுள்ளது.
அதேபோல, பயணிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இந்த சம்பவம் குறித்து பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் உள்ளக புகார் குழுவிடம் அல்லது வேறு ஏதேனும் குழுவிடம் புகாரளிக்கப்பட்டதா என்ற விவரங்களை விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் கேட்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யவில்லை என்றால் அதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் டெல்லி பெண்கள் ஆணையம் கூறியுள்ளது.