”சந்திராயன் -3 தயாரிக்க உதவியவர்களுக்கு 17 மாதங்களாக சம்பளம் இல்லை” - வெளியான அதிர்ச்சி தகவல்
”சந்திராயன் -3 தயாரிப்பு பணியில் இருந்த பொறியாளர்களுக்கு ஓராண்டாக சம்பளம் இல்லை”
சந்திராயன் -3 தயாரிப்பு பணியில் ஈடுபட்ட கனரக பொறியியல் நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்களுக்கு 17 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, நிலவை ஆய்வு செய்வதற்கான சந்திராயன் விண்கலங்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் சந்திராயன் -1 என்ற விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. அதில், தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் உறுதியானது. அதை தொடர்ந்து 2019ம் ஆண்டு ஜூலை மாதம் சந்திராயன் -2 என்ற விண்கலத்தை விண்ணில் இஸ்ரோ செலுத்தியது. உலகின் எந்த நாடுகளும் செல்லாத நிலவின் தென் துருவப்பகுதிக்கு சென்ற சந்திராயன் -2 புதிய மைல்கல் சாதனையை படைத்தது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திராயன் -2 சோதனையில் ரோவர் செயலிழந்தது. ஆனால், விண்கலத்தின் ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிக்கரமாக நிலை நிறுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
அதை தொடர்ந்து ரூ.615 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட சந்திரான -3 நேற்று வெற்றி கரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 3,900 கிலோ எடை கொண்ட சந்திராயன் -3 ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணை நோக்கி வெற்றி கரமாக பயணித்தது. 42 நாட்கள் விண்ணில் பயணிக்கும் சந்திராயன் -3 ஆகஸ்ட் 23ம் தேதி நிலவில் தரையிறங்க உள்ளது. அந்த தருணத்துக்காக இந்தியா காத்து கொண்டிருக்கிறது. நிலவு ஒரு நாள் மட்டுமே இருந்து ஆய்வு செய்யும் சந்திராயன் -3 விண்கலத்தின் ரோவர், பூமிக்கு தேவையான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை திரட்டி கொடுக்க உள்ளது.
இதற்கிடையே, சந்திராயன் - 3 விண்கலத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்ட பொறியாளர்களுக்கு 17 மாத ஊதியம் தரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சந்திராயன் -3 தயாரிப்பு பணியில் ராஞ்சியில் உள்ள கனரக பொறியியல் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மத்திய கனரக தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த நிறுவனத்தில் 3,000 பேர் பொறியாளராகவும், உதவி பணியாளர்களாகவும் பணியாற்றி வந்துள்ளனர். சந்திராயன் -3 பணியில் ஈடுபட்ட அவர்களுக்கு ரூ.1000 கோடி கேட்டதாகவும், ஆனால் அந்த தொகையை தர முடியாது என மத்திய அரசு கூறியதால், ஊழியர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.