எம்.பி.க்கள் சஸ்பெண்டை கண்டித்து கருப்புப் பட்டை ஆர்ப்பாட்டம்: அவை ஒத்திவைப்பு!
நடப்பு குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் 12 எம்.பி.க்கள் நீக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சியினர் பலரும் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.
நடப்பு குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் 12 எம்.பி.க்கள் நீக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சியினர் பலரும் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.
மாநிலங்களவையில் உறுப்பினர்களின் அமளியால் அவை பகல் 12 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பார்லிமென்ட் வளாகத்தில் காந்தி சிலையின் முன் அமர்ந்து எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைவரும், கைகளில் கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி வருகின்றனர். சிலர் போராட்டத்தை உணர்த்தும் வகையில் கருப்பு நிறத்தில் முகக்கவசமும் அணிந்துள்ளனர்.
நீக்கம் பின்னணி என்ன?
12 எம்.பி.,க்கள் இந்த குளிர்கால கூட்டத்தொடர் முழுவதுமே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாயா வெர்மா, ஆர். போரா, ராஜாமணி பட்டீல், சையத் நசீர் ஹுசைன், அகிலேஷ் பிரசாத் சிங், சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. டோலா டென் உள்ளிட்ட 12 எம்.பி.க்கள் தான் ராஜ்யசபாவில் இருந்து சஸ்பெண்ட் செய்து வைக்கப்பட்டுள்ள 12 எம்.பி.க்கள்.
இவர்கள் ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள் தெரியுமா? கடந்த மழைக்காலக் கூட்டத்தொடர் முழுவதும் பெகாசஸ் விவகாரம் பார்லிமென்ட்டின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. குறிப்பாக, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19-ஆம் தேதி தொடங்கியதில் இருந்து பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் சட்டங்கள் விவகாரம் ஆகியவற்றை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியிலும், கூச்சல் குழப்பம் விளைவித்து வந்தன.
அப்போது ராஜ்யசபாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெகாசஸ் விவகாரத்தை சுட்டிக்காட்டி கடும் அமளியில் ஈடுபட்டன. மேஜையின் மீது ஏறி போராட்டம் நடத்தினர். ஆகஸ்ட் 11-ம் தேதி மாநிலங்களவையில் பேசிய அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக மறுநாள் அவையில் கண்ணீர் விட்டு அழுதார். இது பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
கண்ணீர் மல்க பேச்சு:
மறுநாள் இது குறித்து பேசிய வெங்கய்ய நாயுடு, "ஒரு பிரச்சனை குறித்து விவாதம் செய்ய கோரப்பட்டபோது அதற்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால், அவையின் மாண்பை காக்க உறுப்பினர்கள் தவறிவிட்டனர். அவையில் அவர்களின் செயல்பாடு எல்லை மீறி சென்று விட்டது. மேஜையின் மீது ஏறி போராட்டம் நடத்துகின்றனர். கருத்து வேறுபாடு இருக்கலாம். விவாதிக்கலாம், எதிர்ப்பு தெரிவிக்கலாம், வாக்களிக்கலாம்.
ஆனால் மேஜையின் மீது ஏறுவது பார்லிமென்ட்டின் மாண்பையே சிதைக்கும் செயல். அவை உறுப்பினர்கள் அனைவரும் கண்ணியமாக இருக்க வேண்டும். நேற்றைய சம்பவத்தால் நான் மிகுந்த வேதனை அடைந்தேன். மிகவும் வருத்தமுற்றேன். வேதனையை தெரிவிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை. தூக்கமில்லாமல் நான் இரவைக் கழித்தேன் என்று கண்ணீர் மல்கப் பேசினார்.
#WATCH | Congress MP Rahul Gandhi joins the Opposition leaders' protest against the suspension of 12 Opposition members of Rajya Sabha, in Delhi pic.twitter.com/w7Y1gSLTym
— ANI (@ANI) December 2, 2021
;
இந்நிலையில் தான், பார்லிமென்ட் மழைகாலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் அத்துமீறி நடந்து கொண்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் இந்த குளிர்காலக் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.