ஒமிக்ரான் அச்சுறுத்தல் | இந்தியாவுக்குள் நுழையும் சர்வதேச பயணிகளுக்கு RT-PCR பரிசோதனை முன்பதிவு கட்டாயம்..
அபாய வட்டத்துக்குள் இருக்கும் நாடுகளில் இருந்து பெரிய விமான நிலையங்களுக்குள் நுழையும் சர்வதேச பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு முன்பதிவு செய்துள்ளார்களா?மத்திய அரசு உத்தரவு என்ன?
கோவிட் பெருந்தொற்றின் புதிய திரிபு வைரஸான ஒமிக்ரான் தொற்று பல்வேறு நாடுகளில் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருப்பதால், அபாய வட்டத்துக்குள் நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் முக்கிய விமான நிலையங்களின் வழியாக நுழையும் சர்வதேச பயணிகள் அனைவருக்கும் கட்டாய ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்திய அரசு கட்டாயப்படுத்தியுள்ளது.
மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றில், டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரூ, ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களில் வந்து இறங்கும் அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் வந்து இறங்கியதும் ஆர்டி - பிசிஆர் கொரோனா பரிசோதனையைக் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு முன்பதிவு செய்யவேண்டும் எனவும், இந்த நடைமுறை டிசம்பர் 20 முதல் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆபத்தான நாடுகள் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாட்டில் இருந்து இந்த 6 பெரிய விமான நிலையங்களுக்குள் நுழையும் சர்வதேச பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு முன்பதிவு செய்துள்ளார்களா என்பதை விமானத் துறை கண்காணிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
`கடந்த 14 நாள்களுள், ஆபத்தான நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் நுழையும் பயணிகளுக்கு, ஏர் சுவிதா இணைய தளத்தில் ஆர்டி - பிசிஆர் பரிசோதனைக்குக் கட்டாயமாக முன்பதிவு செய்வதற்கான வசதிகள் சேர்க்கப்படும். இணையத்தில் உள்ள சுய பிரகடனப் படிவத்தை நிரப்பும் போதே விமான நிலையத்திற்குத் தொடர்புள்ள இணைய தளத்திற்குச் செல்வதற்கான வழிமுறையும் ஏர் சுவிதா இணைய தளத்தில் கொடுக்கப்படும்’ என இந்தச் சுற்றறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிபடுத்துவதற்காக, வரும் டிசம்பர் 19 முதல் 20 வரையிலான நள்ளிரவு முதல் இந்த உத்தரவு பொருந்தும் என்றும், முதல் கட்டமாக 6 பெரிய விமான நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 14 அன்று, இந்தியாவில் ஒமிக்ரான் திரிபு காரணமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்த பிறகு இந்தப் பயணக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் படிப்படியாக ஒமிக்ரான் திரிபு காரணமான தொற்று பரவி வருகிறது.
தற்போதைய தகவல்களின் படி, குஜராத்தைச் சேர்ந்த 42 வயது ஆண் ஒருவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு, பரிசோதனை செய்யப்பட்டதில் ஒமிக்ரான் திரிபு பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும், டெல்லியின் ஏற்கனவே ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 என்று இருந்த நிலையில் தற்போது 4 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருப்பதால், டெல்லியில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. டெல்லி அரசு தலைநகர்ப் பகுதியில் ஒமிக்ரான் திரிபு தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், டெல்லியில் பரவும் நிலை இன்னும் ஏற்படவில்லை என்றும், ஒமிக்ரான் திரிபு பரவல் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது.