Odisha Train Accident: கோரமண்டல் கோர விபத்து.. அன்பே சிவத்தில் அன்றே வெளியான காட்சிகள்!
Odisha Train Accident: இதுமாதிரியான விபத்தினைப் பார்க்கும் போது, இதற்கு பின்னர் இதுபோன்ற விபத்துகள் நடைபெறக்கூடாது என மனதில் தோன்றுகிறது.
ஒரு திரைப்படத்தினைப் பார்க்கும் போது அதிலுள்ள ஒரு காட்சி நமது வாழ்வுடன் ஒத்துப்போகும் போது மனதில் அந்த படமும் காட்சியும் நீங்காத இடம் பிடித்து விடும். அல்லது ஒரு திரைப்படத்தில் வரும் காட்சி நிஜத்தில் நடக்கும் போது, இது மாதிரி அந்த படத்தில் வரும்ல என நாம் கூட சொல்லி இருப்போம். ஆனால் இன்று நாம் எவ்வளவு பரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தாலும், நம் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும் ஒரு எண்ணம். ஒடிசா ரயில் விபத்து தான். எல்லாம் சில மணி துளிகளில் நிகழ்ந்து விட்டது. அதனால் உடல் நசுங்கி, பாகங்களை இழந்து என இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் கிட்டத்தட்ட 300. இதுதவிர தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலையை பார்க்கும் போது இன்னும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சமும் தொற்றிக்கொள்கிறது.
இப்படியான ஒரு விபத்து நடக்கும் என யாருமே கனவில் கூட நினைத்துப் பார்த்து இருக்கமாட்டார்கள். அப்படி, நம் சிந்தனையில் இல்லாத ஒரு கோர விபத்து 2003ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறும் போது நீங்கள் நம்பித் தான் ஆகவேண்டும். ஆமாம் உலகநாயகன் கமல்ஹாசன் திரைக்கதையில், சுந்தர் சி இயக்கத்தில் உருவான திரைப்படம் அன்பே சிவம். இந்த படத்தில் கமல்ஹாசன், மாதவன், கிரன் மற்றும் நாசர் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருப்பார்கள். இந்த படத்தில் ஒடிசாவில் உள்ள புவனேஷ்வரில் இருந்து சென்னை வரும் கோரமண்டல் ரயிலில் கமல்ஹாசன் மற்றும் மாதவன் வந்து கொண்டு இருக்கும் போது, அதற்கு முன்னர் சென்றுகொண்டு இருந்த ரயில் தடம் புரண்டு விட்ட காட்சி இருக்கும். தற்போது அதேபோல், சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்த கோரமண்டல் ரயில் தற்போது ஒடிசாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த படத்தில் வரும் ரயில் விபத்துக்காட்சிகளும் தற்போது நம்மிடையே பகிரப்படும் ஒடிசா ரயில் விபத்துக் காட்சிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கிறது. ஆனால் இது மகிழ்ச்சியோடு நினைவு கூறத்தக்க நிகழ்வாக இல்லை என்பது தான் வருத்தற்திற்குரியதாக உள்ளது.
அதேபோல், இந்த படத்தில், கமல்ஹாசன் மாதவனிடம் சுனாமி பற்றி கூறுவார். அன்றைக்கு படம் பார்த்த தமிழ் ஆடியன்ஸ்க்கு சுனாமி என்றால் என்னவென்றே தெரியவில்லை. ஆனால் படம் 2004ஆம் ஆண்டு டிசம்பரில் சுனாமி தமிழ்நாட்டினை தாக்கி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றது. அதன் பின்னர் தான், தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு சுனாமி பற்றி தெரியத்தொடங்கியது. ஆனால் அதையும் தசவதாரம் படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.
இந்த இரு நிகழ்வுகளும் அன்பே சிவம் படத்தில் ஏற்கனவே வந்திருப்பதால் சிலர் அன்றே கணித்த ஆண்டவர் என சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதுமாதிரியான விபத்தினைப் பார்க்கும் போது, இதற்கு பின்னர் இதுபோன்ற விபத்துகள் நடைபெறக்கூடாது என மனதில் தோன்றுகிறது.