ஒரே நாளில் 56 ஆயிரம் ஆசிரியர்கள் லீவு.. 40 லட்சம் மாணவர்கள் படிப்பு பாதிப்பு..! என்ன நடக்குது நாட்டில்?
ஒடிசாவில் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒரே நாளில் விடுப்பு எடுத்ததால் 40 லட்சம் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அந்த மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
56 ஆயிரம் ஆசிரியர்கள் விடுப்பு:
இந்த நிலையில், ஒப்பந்த பணி நியமன முறையை ரத்து செய்ய வேண்டும், ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆசிரியர் சங்கத்தினர் இன்று யாரும் எதிர்பாராதவிதமாக மாபெரும் விடுப்பை எடுத்தனர். அதாவது, அரசாங்கத்திற்கு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நெருக்கடி அளிக்கும் விதமாக மாநிலத்தில் பணியாற்றும் 56 ஆயிரம் ஆசிரியர்கள் இன்று மொத்தமாக விடுப்பு எடுத்தனர்.
40 லட்சம் மாணவர்கள் பாதிப்பு:
ஆசிரியர்கள் எடுத்த விடுப்பு காரணமாக ஒடிசாவில் அரசுப்பள்ளியில் படிக்கும் 40 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் பள்ளிகளின் பிரார்த்தனை கூட்டத்திற்கு பிறகு மூடப்பட்டிருந்தது. சில இடங்களில் ஓரிரு ஆசிரியர்கள் மட்டும் வந்திருந்த பள்ளிகளில் வகுப்புகள் எடுக்கப்படாமல் பள்ளிகள் நடத்தப்பட்டது.
ஆசிரியர்கள் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு நெருக்கடி தருவதற்காக, மாணவர்கள் பாதிக்கும் வகையில் பள்ளிகளுக்கு கும்பல் விடுப்பு எடுத்தது அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்களின் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவது பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.
ஹெலிகாப்டர் பயணத்திற்கு 500 கோடி ரூபாய் செலவு செய்யும் அரசாங்கம். ஆசிரியர்களின் கோரிக்கையை ஏன் நிறைவேற்ற மறுக்கிறது? என்று இந்த விவகாரத்தில் அந்த மாநில எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த மாநில காங்கிரஸ் தலைவர் ஒடிசாவின் கல்வி சூழலில் எமர்ஜென்சி சூழல் உருவாகியுள்ளதாக கூறியுள்ளார்.
பாதிக்கப்படும் படிப்பு:
இந்த விவகாரம் தொடர்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. அரபிந்தா தாலி, மாநில அரசு நிச்சயம் ஆசிரியர்கள் கோரிக்கை குறித்து பரீசிலிக்கும் என்று பேட்டியளித்துள்ளார். மேலும் ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற அமைக்கப்படும் துணை குழுக்கள் ஆசிரியர்களின் கோரிக்கையை தாமதப்படுத்தவே அமைக்கப்படுகிறது என்றும் ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒடிசாவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த மாநிலத்தில் ஆசிரியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபவதற்கும், மாணவர்கள் எதிர்காலம் பாதிக்காத வகையில் நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும் என கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: Pawan Kalyan : தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி.. அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் பவன் கல்யாண்..! ஆந்திர அரசியலில் பரபரப்பு..!
மேலும் படிக்க; Kalaignar Women Assistance : மகளிர் ஹேப்பி அண்ணாச்சி.. தனி ஏடிஎம் கார்டு கொடுத்து திட்டத்தை துவக்கிவைக்கும் முதலமைச்சர்