'ஸ்விக்கி, சொமேட்டோ டெலிவரி பணியாளர்கள் லிஃப்ட் பயன்படுத்தக்கூடாது': போஸ்டரால் கொதித்த நெட்டிசன்கள்
ஸிவிக்கி, சொமேட்டோ டெலிவரி பணியாளர்கள் லிஃப்ட் பயன்படுத்தக்கூடாது, படிகளிலேயே செல்ல வேண்டும் என்று உதய்பூரில் ஒரு கட்டிடத்தில் எழுதிவைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் எதிர்ப்பலைகளை சம்பாதித்துள்ளது.
ஸிவிக்கி, சொமேட்டோ டெலிவரி பணியாளர்கள் லிஃப்ட் பயன்படுத்தக்கூடாது மாறாக படிகளிலேயே ஏறிச்செல்ல வேண்டும் என்று உதய்பூரில் ஒரு அடுக்குமாடி வணிக வளாகத்தில் எழுதிவைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் எதிர்ப்பலைகளை சம்பாதித்துள்ளது.
நாடு முழுவதுமே கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் இளைஞர்கள் பலருக்கும் வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தான் இவ்வாறாக எழுதப்பட்டுள்ளது. இது குறித்து பத்திரிகையாளர் சோபனா கே நாயர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒற்றை வரியில், நவீன கால நிலப்பிரபுத்துவம் என கடுமையாகச் சாடியுள்ளார். உழைக்கும் வர்க்கத்தினரை சுரண்டும் செயல் என்பதால் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட கட்டிடத்தில் 15 மாடிகள் உள்ளன. அங்கு ஒருவேளை 13 வது மாடியில் இருப்பவர் உணவு ஆர்டர் செய்திருந்தால் அங்குள்ள நபருக்கு ஸ்விக்கி, சொமேட்டோ டெலிவரி பணியாளர்கள் எப்படி ஏறிச் சென்று குறித்து நேரத்தில் உணவைக் கொடுக்க முடியும் என இணையதளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் நோய் பாதிப்பு ஏற்பட்டு வீட்டில் இருப்பவர்களுக்கு கூட ஸிவிக்கி, சொமேட்டோ மூலம் உணவுப் பொட்டலங்களைப் பெற்றனர். அப்படியான நிறுவனங்களுக்கு இத்தகைய நெருக்கடியை ஏன் கொடுக்க வேண்டும் என நல் உள்ளம் கொண்டோர் நியாயம் கேட்கின்றனர். பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் தனது ட்வீட்டில், நான் லண்டனில் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்கிறேன். ஸ்கைஸ்கேர்ப்பர் எனப்படும் பல மாடிகள் கொண்ட கட்டிடத்தில் இருந்தெல்லாம் டெலிவரி கோரப்படும். அப்போது என்னைப் போன்றோருக்கு முன்னுரிமை வழங்கி பிரிட்டன் மக்கள் லிஃப்டில் இடம் தருவர். ஏனென்றால் குறித்த நேரத்தில் உணவை டெலிவரி செய்யாவிட்டால் பிரச்சனையாகிவிடும். ஆனால், இந்தியாவில் முன்னணி நகரமான உதய்ப்பூரில் இப்படி ஸ்விக்கி, சொமேட்டோ டெலிவரி நிறுவன ஊழியர்களுக்குத் தடை சொல்லியிருப்பது சங்கடமானது என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம், வாடிக்கையாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது சொமேட்டோ உணவு ஆர்டரை ஒரு முஸ்லீம் இளைஞர் விநியோகம் செய்ய இருந்ததால் அதை கேன்சல் செய்ததாகப் பதிவிட்டார். இதற்கு பதிலளித்த சொமேட்டோ நிறுவனம், உணவுக்கு மதம் இல்லை, உணவே மதம் என்று கூறியது. சொமேட்டோவின் இந்த செய்கைக்கு பலரிடமும் இருந்து பாராட்டுகள் குவிந்தவண்ணம் இருந்தது.
இவ்வாறாக பசியாற்றும் உணவு டெலிவரி தொழிலுக்கு எக்காரணம் கொண்டும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்பதே சமூகவலைதளப் பதிவர்களின் கருத்தாக இருக்கிறது.