North Indian Workers: வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்; தமிழ்நாட்டிற்கு ஆய்வுக்காக வந்த பீகார் அதிகாரிகள்
தமிழ்நாட்டில் உள்ள பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து பீகார் மாநில அதிகாரிகள் 2 பேர் தமிழ்நாடு வந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, குறிப்பாக பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வந்துள்ள பீகார் அதிகாரிகள்:
இந்த நிலையில், தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து விசாரணை நடத்த பீகார் மாநிலத்தில் இருந்து பீகார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பாலமுருகன் உள்பட 2 அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடமாநில பத்திரிகையாளர் ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சம்பந்தமில்லாத, பொய்யான வீடியோக்களை பதிவிட்டு வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக குறிப்பிட்டு இருந்தார்.
தமிழ்நாடு டிஜிபி விளக்கம்:
இதனை குறிப்பிட்டு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, அந்த வீடியோ தவறானது என்றும், வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக பணியாற்றி வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து, பத்திரிகையாளர் தான் பதிவிட்டு இருந்த வீடியோவை நீக்கிவிட்டார்.
இருப்பினும், இந்த வீடியோக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ட்வீட் செய்திருந்தார். அதில், தமிழ்நாட்டில் பீகார் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக செய்திகளில் வெளியாகியிருந்ததைப் பார்த்து தெரிந்துகொண்டேன் என்ரும் தமிழ்நாடு காவல்துறையினரிடம் பேசி பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளேன் எனவும் கூறியிருந்தார்.
பொய் செய்திகள் பரப்பியவர் மீது வழக்கு:
இதற்கிடையே, வடமாநில தொழிலாளர்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்பிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153(A), 505(ix(b) கீழ் தெய்னிக் பாஸ்கர் பத்திரிக்கையின் ஆசிரியர் மீது ஒரு வழக்கும், திருப்பூர் மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 153(B), 505(ii)(b) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டபிரிவு 56(D) கீழ் தன்வீர் போஸ்ட் என்ற பத்திரிகையின் உரிமையாளர் முகமது தன்வீர் என்பவர் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிருவனங்கள் தொடங்கி ஹோட்டல்கள் வரை அடிமட்ட கூலி வேலைக்கு வடமாநில தொழிலாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள். குறிப்பாக திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம்.
திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகளில் தமிழர்களை விட வடமாநில தொழிலாளர்கள் தான் அதிகம் பணிபுரிகின்றனர். திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
இதனை திருப்பூர் மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்தது. மேலும், வடமாநில தொழிலாளர்களின் புகார்களைக் களைய தனிப் பிரிவும் ஏற்படுத்தப்பட்டது.