"இந்தியர் யாரும் அதை மறக்கமாட்டாங்க" பொங்கி எழுந்த மோடி
நீதிமன்றங்களை கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சியை இந்தியர் எவரும் மறக்கமாட்டார்கள் என அவசரநிலை பிரகடனம் குறித்து பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.

அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதன் 50ஆவது ஆண்டினைக் குறிக்கும் நாளான இன்று, நாட்டின் வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக இருந்த காலத்தில் ஜனநாயகத்தை பாதுகாக்க உறுதியுடன் நின்ற எண்ணற்ற இந்தியர்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
"சிறையில் அடைக்கப்பட்ட சாமானியர்கள்"
அரசியல் சட்ட மாண்புகள் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதலை நினைவுகூர்ந்த பிரதமர், அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்ட, பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்ட, எண்ணற்ற அரசியல் தலைவர்கள், சமூக ஊழியர்கள், மாணவர்கள், சாமானிய மக்கள், சிறையில் அடைக்கப்பட்ட தினமான ஜூன் 25, அரசியல் சட்ட படுகொலை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
நமது அரசியலமைப்பு கோட்பாடுகளை வலுப்படுத்தவும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நமது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க ஒன்றுபட்டு பாடுபடவுமான உறுதிப்பாட்டையும் மோடி வலியுறுத்தியுள்ளார்.
பொங்கி எழுந்த மோடி:
அவசரநிலை எதிர்ப்பு இயக்கம் கற்றல் அனுபவமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ள அவர், இது நமது ஜனநாயக கட்டமைப்பை பாதுகாக்கும் உணர்வை வலுப்படுத்தியது என்றார். கடந்த 1975 முதல் 1977 வரையிலான அவமானகரமான காலம் பற்றி இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவசரநிலை காலத்தின் இருண்ட நாட்களை நினைவில் வைத்துள்ளவர்கள் அல்லது தங்கள் குடும்பங்களின் பாதிப்புகளை அறிந்தவர்கள் அந்த அனுபவங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளுமாறு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தொடர்ச்சியாக அவர் பதிவிட்டிருப்பதாவது, “அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட, இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றில் 50 ஆண்டுகளை இந்த நாள் குறிக்கிறது.
இந்திய மக்கள் இந்த தினத்தை அரசியல் சட்ட படுகொலை தினம் என குறிப்பிடுகிறார்கள். இந்நாளில் இந்திய அரசியல் சட்டத்தில் இடம் பெற்றிருந்த மாண்புகள் கைவிடப்பட்டன, அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டன, பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்டது.
"இந்தியர் யாரும் மறக்கமாட்டாங்க"
பல அரசியல் தலைவர்கள், சமூக ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் சாமானிய மக்கள் சிறையில் அடைக்கப்பட்ட காங்கிரஸ் அரசு அதிகாரத்தில் இருந்த அந்த காலகட்டம் ஜனநாயகம் சிறையில் அடைக்கப்பட்டதாக இருந்தது”
“நமது அரசியல் சட்ட உணர்வு மதிக்கப்படாத நிலையை, நாடாளுமன்றத்தின் குரல் முடக்கப்பட்டதை, நீதிமன்றங்களை கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சியை இந்தியர் எவரும் மறக்கமாட்டார்கள். அவர்களின் சூழ்ச்சிகளுக்கு 42-வது திருத்தம் முதன்மையான உதாரணமாகும். ஏழை எளிய, விளிம்புநிலை மக்கள் குறி வைக்கப்பட்டதோடு அவர்களின் கௌரவமும் பாதிக்கப்பட்டது”
“நமது அரசியலமைப்பு சட்ட கோட்பாடுகளை வலுப்படுத்தவும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நமது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க ஒன்றுபட்டு பாடுபடவுமான உறுதிப்பாட்டையும் நாம் வலியுறுத்துவோம். நமது வளர்ச்சியின் புதிய உச்சங்களை அடைவோம். ஏழை எளிய மக்களின் கனவுகளை நனவாக்குவோம்" என பதிவிட்டுள்ளார்.





















