ஆராய்ச்சியில் அசத்திய புதுச்சேரி மாணவி.. ஜெர்மனிக்கு சென்று படிக்க கிடைத்த வாய்ப்பு.. வாவ்
மதிப்புமிக்க இந்தோ - ஜெர்மன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் பிஎச்டி தொழில்துறை உதவித்தொகைத் திட்டத்திற்கு புதுச்சேரி NITஇன் ஆராய்ச்சி மாணவி ஷிமோல் பிலிப் தேர்வாகியுள்ளார்.

காரைக்காலில் அமைந்துள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் மூத்த ஆராய்ச்சி மாணவியான ஷிமோல் பிலிப் மதிப்புமிக்க இந்தோ-ஜெர்மன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் பிஎச்டி தொழில்துறை ஈடுபாடு உதவித்தொகைத் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாணவி அசத்தல்:
நீடித்த கான்கிரீட் மற்றும் அதன் பண்புகளை கணிக்க செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு என்ற தலைப்பில் ஷிமோல் பிலிப் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தார். இந்த மதிப்புமிக்க உதவித்தொகைத் திட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களிலிருந்து 10 மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதில், ஷிமோல் பிலிப்பும் ஒருவர் ஆவார். இந்த ஆராய்ச்சியானது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி ஆறு மாத காலங்கள் நடைபெறவுள்ளது. ஜெர்மனியின் பௌஹவுஸ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானியான டாக்டர். கிறிஸ்டியன் ரோஸ்லர் என்பவருடன் சேர்ந்து ஷிமோல் பிலிப் பணியாற்ற உள்ளார்.
ஜெர்மனிக்கு செல்லும் ஷிமோல் பிலிப்:
புதுமையான தொழில்நுட்பங்கள் மூலம் கான்கிரீட் துறையின் சுற்றுச்சூழல் தடயத்தைக் குறைப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புத்தொழில் நிறுவனத்தில் இருவரும் இணைந்து பணியாற்றவுள்ளார். மேலும், கலை மற்றும் வடிவமைப்பில் சிறந்து விளங்குவதற்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான பௌஹவுஸ் பல்கலைக்கழகம் வெய்மரில் உள்ள மேம்பட்ட ஆய்வக வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளவுள்ளார்.
இந்த ஆராய்ச்சியின்போது மாதாந்திர உதவித்தொகை, விமான கட்டணம், விசா கட்டணம் மற்றும் காப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கிய பயண உதவி, அத்துடன் ஆராய்ச்சி காலம் முழுவதும் மருத்துவ வசதி உள்ளிட்ட விரிவான நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
Congratulations to research scholar, Ms. Shimol Philip under the supervision of Dr. Nidhi M, Department of Civil Engineering, is selected for the Prestigious IGSTC PhD Industrial Exposure Fellowship. pic.twitter.com/5kDLeojMD2
— National Institute of Technology Puducherry (@nitpyofficial) May 27, 2025
புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் இயக்குநர், முனைவர். மகரந்த் மாதாவ் கங்ரேகர், தனது அலுவலகத்தில் நடந்த சந்திப்பின் போது, ஷிமோல் மற்றும் அவரது வழிகாட்டியான முனைவர் எம். நிதி ஆகியோரை நேரில் வாழ்த்தி, அவர்களின் குறிப்பிடத்தக்க சாதனையைப் பாராட்டினார்.





















