Nirmala Sitharaman: தயங்கி தயங்கி இந்தி பேசுவது ஏன் என கேள்வி? மத்திய நிதியமைச்சர் சொன்ன பதில் இதுதான்..
ஆங்கிலம், தமிழ் மொழிகளில் புலமைப்படைத்தவராக இருந்த போதிலும், இந்தியை தயங்கி தயங்கியே பேசி வருகிறார் நிர்மலா சீதாராமன்.
ஆறு மொழிகளில் பேசி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்:
தமிழ்நாட்டில் மதுரையில் பிறந்தவர் நிர்மலா சீதாராமன். வர்த்தகம் மற்றும் தொழில்துறை, பாதுகாப்பு உள்ளிட்ட அமைச்சகங்களை தொடர்ந்து, தற்போது மத்திய நிதியமைச்சராக பதவி வகித்து வருகிறார். கடந்த 2020ஆம் ஆண்டு, ஆறு மொழிகளில் கவிதைகளை மேற்கொள் காட்டி வார்த்தைகளை பயன்படுத்தி மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது அனைவரையும் கவர்ந்திழுத்தது.
ஆங்கிலம், தமிழ் மொழிகளில் புலமைப்படைத்தவராக இருந்த போதிலும், இந்தியை தயங்கி தயங்கியே பேசி வருகிறார். செய்தியாளர் சந்திப்புகளின்போது கூட, பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பதில் அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இதுகுறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ள அவர், தனது மாநிலத்தில் (தமிழ்நாடு) நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக இந்தி பேசுவதில் சிரமப்படுவதாக கூறியுள்ளார்.
இந்தியை தயக்கத்துடன் பேசுவது ஏன்?
ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மத்தியில் பேசிய நிர்மலா சீதாராமன், "நான் ஆங்கிலத்தில் பேசுவது உங்களுக்கு (மாணவர்கள்) வசதியாக இருக்கிறதா? நான் சிறப்பாக இந்தி பேச மாட்டேன். நான் பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது, எனது மாநிலம் முழுவதும் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன. கல்வியில் அரசியல் பெரும் பங்காற்றியது. என்னை பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் இந்தி கற்பது சாத்தியமற்றது" என்றார்.
இந்தியில் பேசுவது தனக்கு நடுக்கத்தை தரும் என கடந்த 2022ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது குறிப்பிட்ட அவர், "நான் பெரும் சங்கோஜத்துடன்தான் இந்தி மொழியில் பேசுகிறேன். ஒரு நபர் வயது வந்த பிறகு ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வது கடினம். எனது கணவரின் தாய்மொழியான தெலுங்கை விரைவாக கற்று கொண்டேன். ஆனால், இந்தியை அப்படி கற்று கொள்ள முடியவில்லை.
எனது கல்லூரி நாள்களில் தமிழ்நாட்டில் இந்திக்கு எதிராக வன்முறை போராட்டங்கள் நடந்தன. இந்தி அல்லது சமஸ்கிருதத்தை இரண்டாம் மொழியாக தேர்வு செய்யும் மாணவர்கள், முதலிடம் பெற்றிருந்தாலும், மாநில அரசால் உதவித்தொகைக்கு தகுதியானவர்களாக கருதப்படவில்லை" என்றார்.
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்:
இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள், திமுக ஆட்சி அமைப்பதற்கு முக்கிய காரணிகளில் ஒன்று. கடந்த 1937ஆம் ஆண்டு, மதராஸ் மாகாணத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்ற ராஜாஜி, ‘இனி பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக இருக்கும்’ என அறிவித்தார். இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது.
திருச்சி துறையூரில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில், அண்ணா இந்தித் திணிப்பைக் கண்டித்து ஆற்றிய உரைதான் முதல் எதிர்ப்புக் குரலாக ஒலித்தது. இதையடுத்து தந்தை பெரியாரும் இந்தித் திணிப்பை எதிர்த்து கருத்து தெரிவித்தார். அதன் பிறகு, தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடித்தன.