Dawood Ibrahim: பிரபலங்களை தாக்க புதிய குழு - தாவூத் இப்ராஹிமின் அடுத்த திட்டம் என்ன?
பிரபலங்கள் மீது தாவூத் இப்ராஹிம் புதிய குழு ஒன்றை உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தாக்குதல் நடத்த ஒரு சிறப்பு குழுவை அமைத்துள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பிற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி இந்தியாவிலுள்ள பிரபலங்கள் மீது தாக்குதல் நடத்த அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்தியாவிலுள்ள தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த இந்தக் குழு திட்டமிட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. டெல்லி மற்றும் மும்பை போன்ற முக்கிய நகரங்களை இன்று குழு குறிவைக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்தக் குழுவில் இருப்பவர்களுக்கு தாவூத் இப்ராஹிம் ஹாவாலா பரிவர்த்தனை மூலம் பணம் பரிமாற்றம் செய்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தி இந்தியாவில் இருக்கும் அமைதியை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தாவூத் இப்ராஹீம் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் தாவூதின் கூட்டாளிகளிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை தாவூத் இப்ராஹிமின் சகோதரர் இக்பால் கஸ்கர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இவரை 24ஆம் தேதி வரை அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2017ஆம் ஆண்டு தொழிலதிபர்களை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தாவூத் இப்ராஹிமின் சகோதரர் இக்பால் கஸ்கர் மும்பை தானே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அவரை மீண்டும் அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 1993ல் மும்பையில் நடந்த குண்டுவெடிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தவர் தாவூத் இப்ராஹிம். இவர் தற்போது வரை தலைமறைவாக உள்ளார். இவருடன் தொடர்பில் உள்ள நபர்களை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. 1993ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி அபுபக்கர் 29 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். எனினும் தற்போது வரை தாவூத் இப்ராஹிம் எங்கு இருக்கிறார் என்று யாருக்கும் தகவல் கிடைக்கவில்லை. தாவூத் இப்ராஹிம் மீதான பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: 200 அடி பள்ளத்தாக்கில் சிக்கிக்கொண்ட இளைஞர்...! ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்ட இந்திய விமானப்படை..!