PM Modi: அடுத்த 5 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி, செழிப்பு இருக்கும்: பிரதமர் மோடி உறுதி
என்னுடைய 3-வது ஆட்சிக் காலத்தின் முதல் 100 நாட்களுக்கான ப்ளூபிரிண்ட்டும் தயாராக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி, செழிப்பு இருக்கும் என்று பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்து உள்ளார்.
தனியார் செய்தி தொலைக்காட்சி சார்பில் புது டெல்லியில், ’உயரும் பாரதம்’ (Rising Bharat Summit) என்ற பெயரில் உச்சி மாநாடு நடத்தப்பட்டது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
’’21ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது என்று உலகமே நம்புகிறது. உயரும் பாரதத்தின்மீது நம்பிக்கை வைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்களை அனைவரும் பார்க்கிறார்கள். 10 ஆண்டுகளில் நாடு என்ன சாதித்திருக்கிறது என்றும் ஒட்டுமொத்த உலகமும் பார்க்கிறது.
உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் 5ஆவது இடம்
பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும்போது, இந்திய பொருளாதாரம், உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் 5ஆவது இடத்தைப் பெற அரசின் முயற்சிகள் உதவின.
பாஜக தலைமையிலான மத்திய அரசு ஏற்கெனவே அடுத்த 25 ஆண்டுகளுக்கான ரோட் மேப்பை உருவாக்கி உள்ளது. அதேபோல என்னுடைய 3ஆவது ஆட்சிக் காலத்தின் முதல் 100 நாட்களுக்கான ப்ளூபிரிண்ட்டும் தயாராக உள்ளது.
அரசியலில் விலக்கி வைக்கப்பட்ட நடுத்தர சமூகத்தினர்
2014ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அரசியலில், நடுத்தர சமூகத்தினர் விலக்கி வைக்கப்பட்டார்கள். எனினும் கடந்த 10 ஆண்டுகளில் இந்த நிலை மாறியுள்ளது.
தேடிய ஜனநாயக் கூட்டணி அரசுதான், நடுத்தர மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. வீடு கட்டி முடிக்கும் திட்டங்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.
நடுத்தர குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் வெளிநாட்டுக் கல்விக்காக கோடிக்கணக்கில் செலவழித்தன. ஆனால் தற்போது இந்தியாவிலேயே வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கான வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன’’.
இவ்வாறு உயரும் பாரதம் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசினார்.
தீவிரவாதத்துக்கு தக்க பதிலடி
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ’’இந்திய அரசு தீவிரவாதத்துக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. புதிய பாரதம் தீவிரவாதத்தை சகித்துக் கொள்ளாது. தீவிரவாதிகளுக்கு மிகுந்த சேதாரத்தையே ஏற்படுத்தும். நம்மை தீவிரவாத அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய யாருமே, தற்போது இங்கு இல்லை.’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.