Parliament Inauguration Ceremony: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா இப்படித்தான் நடக்கப் போகிறது.. முழு நிகழ்ச்சி நிரல் இதோ..!
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள நிலையில், விழாவிற்கான முழு நிகழ்ச்சி நிரல் வெளியாகியுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள நிலையில், விழாவிற்கான முழு நிகழ்ச்சி நிரல் வெளியாகியுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடம்:
எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு சுமார் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில், புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இதில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டன. ஆனால், புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் இன்றைய நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளன. இந்த நிலையில் இன்று நடைபெறும் பிரதமர் மோடி தலைமையிலான நிகழ்ச்சிக்கான முழு நிரல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக காந்தி சிலைக்கு அருகே அலங்கரிக்கப்பட்ட பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி நிரல்:
நிகழ்ச்சியின் முதல் பகுதி:
காலை 7.15: பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு வருகை தருகிறார்
காலை 7.30: சடங்கு, ஹோமம் வளர்த்தல் என பூஜை துவக்கம். சுமார் ஒரு மணி நேரம் தொடரும். இதில் மடாதிபதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்
காலை 8.30: மக்களவைக்கு பிரதமர் வருகை தருகிறார்
காலை 9.00: சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் ஆதினங்களால் வழங்கப்பட்ட ‘செங்கோல்’ நிறுவப்படுகிறது
காலை 9.30: பிரார்த்தனை நிகழ்ச்சி முடிந்ததும் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பிரதமர் மோடி வெளியேறுகிறார்
நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதி:
காலை 11.30: விருந்தினர்கள் வருகை.
நண்பகல் 12.00: பிரதமர் நரேந்திர மோடி வருகை. தேசிய கீதத்துடன் விழா தொடங்குகிறது.
நண்பகல் 12.10: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் இருவரிடம் இருந்து வரும் உரையை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் வாசிப்பார்
நண்பகல் 12.17: இன்றைய நிகழ்வின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் இரண்டு குறும்படங்கள் திரையிடப்படும்.
நண்பகல் 12.38: மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் உரை (கலந்துகொள்ள வாய்ப்பில்லை). மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உரை.
பிற்பகல் 1.05: ரூபாய் 75 நாணயம் மற்றும் நினைவு முத்திரையை பிரதமர் வெளியிடுகிறார்.
பிற்பகல் 1.10: பிரதமர் நரேந்திர மோடியின் உரை.
பிற்பகல் 2.00: விழா நிறைவடைகிறது.
புதிய நாடாளுமன்ற கட்டடம்:
புதிய நாடாளுமன்ற கட்டடம் 1200 கோடி ரூபாய் செலவில், 18 ஏக்கர் அளவுக்கு அதாவது 64,500 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. தன்னம்பிக்கையின் அடையாளமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட உள்ளது. பாரம்பரிய கலைப் படைப்புகள், தொலைநோக்கு பார்வை மற்றும் இந்திய கட்டடக்கலை திறன் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட இந்த கட்டடம், இரண்டு ஆண்டுகள் 5 மாதம் 18 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
உட்புற வசதிகள்;
இரு அவைகளின் கூட்டுக் கூட்டங்களுக்கு மக்களவை பயன்படுத்தப்படுகிறது. 888 இருக்கைகள் கொண்ட மக்களவை மண்டபத்தில் மொத்தம் 1272 இருக்கையில் பொருத்தப்பட்டு உள்ளன. உறுப்பினர்கள் வாக்களிக்க வசதியாக இருக்கைகளில் பயோமெட்ரிக்ஸ், டிஜிட்டல் மொழிபெயர்ப்பு சாதனங்கள், மாற்றக்கூடிய மைக்ரோ போன்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு உறுப்பினரின் இருக்கையிலும் மல்டிமீடியா காட்சி வசதி உள்ளது. கேலரிகளில் எங்கு அமர்ந்தாலும் சாமானியர்கள் தெளிவாகத் தெரியும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஊடகங்களுக்கு விசேஷ மற்றும் நவீன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஊடகங்களுக்கு மொத்தம் 530 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.