புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: ரூ.64,999-ல் அதிர்ச்சி தரும் விலை! இந்திய சந்தையில் புயல் கிளப்பும் n-First!
ஒருமுறை சார்ஜ் செய்தால் 91 கி.மீ. வரை செல்லும். 1.8 kW PMSM மிட்-டிரைவ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதால் வேகமான ஆக்சிலரேஷன் மற்றும் சக்திவாய்ந்த செயல்திறன் கிடைக்கிறது.
பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாகவும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் விருப்பம் காட்டினாலும், நெடுந்தொலைவு பயணங்களுக்கு உகந்ததாக இல்லை என்ற கருத்து நிலவி வருகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு நீண்ட தொலைவு பயணங்கள் செய்யக்கூடிய வகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை முன்னணி நிறுவனங்கள் தயாரித்து வருகின்றனர்.
எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் நிறைய உள்ளன. இந்த நிலையில், தற்போது இந்திய எலக்ட்ரிக் துறையில் புதிய போட்டியாளர் நுழைந்துள்ளார். Numeros Motors நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் n-First மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை முதல் ஆயிரம் பயணிகளுக்காக வெறும் ரூ.64,999 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர், இத்தாலிய டிசைன் நுணுக்கத்தையும் இந்திய பொறியியல் திறமையையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. விலை குறைவாக இருந்தாலும், அதன் செயல்திறன் மற்றும் வடிவமைப்பு சிறந்த தரத்தில் உள்ளது.n-First ஸ்கூட்டர் மிக அழகான வட்ட வடிவ முன் ஹெட்லாம்ப், ஸ்போர்ட்டி லைன்களுடன் கூடிய திடமான உடல் வடிவம் கொண்டது. 2.5 kWh மாடல்கள் (Max மற்றும் i-Max) தண்ணீரில் மூழ்கிய வகை லித்தியம்-அயான் பேட்டரியுடன் வருகிறது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 91 கி.மீ. வரை செல்லும். 1.8 kW PMSM மிட்-டிரைவ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதால் வேகமான ஆக்சிலரேஷன் மற்றும் சக்திவாய்ந்த செயல்திறன் கிடைக்கிறது. அதிகபட்ச வேகம் 70 கி.மீ/மணி, 2.5 kWh மாடல் முழுச் சார்ஜ் ஆக 5–6 மணி நேரம், 3 kWh மாடல் 7–8 மணி நேரம் எடுக்கும். மேலும் OTA (Over-the-Air) அப்டேட் வசதியும் உள்ளது.
இரண்டு பீஸ் சீட் அமைப்பதன் மூலம் இந்த ஸ்கூட்டரின் பின்புறம் எளிமையாகவும் அழகாகவும் இருக்கும். டிராஃபிக் ரெட் மற்றும் தூய வெள்ளை என இரண்டு நிறங்களில் கிடைக்கும். 16 இன்ச் பெரிய சக்கரங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இது இவ்வகை ஸ்கூட்டர்களில் அரிதான அம்சம் என்று கூறலாம். மூன்று முக்கிய வகைகளில் – n-First Max, n-First i-Max, மற்றும் n-First Max+ என வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதிக சக்தி கொண்ட 3 kWh i-Max+ மாடல் ஒரு முறை சார்ஜ் செய்தால் 109 கி.மீ. வரை பயணிக்கும் திறன் கொண்டது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர், முன்-பின் டிரம் பிரேக் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. வாகனத்தின் நீளம் 1979 மி.மீ., அகலம் 686 மி.மீ., உயரம் 1125 மி.மீ., வீல் பேஸ் 1341 மி.மீ., கிரவுண்ட் கிளியரன்ஸ் 159 மி.மீ. என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பரிமாணங்கள் இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளன. வாங்க விரும்புவோர் ரூ.499 முன்பணம் செலுத்தி நிறுவனத்தின் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





















