New Criminal Laws: புதிய குற்றவியல் சட்டங்கள்.. ஜூலை 1 முதல் அமல்.. வெளியான அறிவிப்பு!
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய குற்றவியல் சட்டங்கள்:
ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்ற சட்டங்களுக்கு மாற்றாக புதிய குற்றவியல் சட்டம், கடும் அமளிக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 97 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், பெரும் விவாதம் இன்றி முக்கியத்துவம் வாய்ந்த குற்றவியல் சட்டம் நிறைவேற்றப்பட்டன.
இந்திய தண்டனை சட்டம், 1860க்கு பதில் பாரதிய நியாய சன்ஹிதா என்ற பெயரில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்திய ஆதார சட்டம், 1872க்கு பதில் பாரதிய சாக்சியா (இரண்டாவது) என்ற பெயரிலும் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1898க்கு பதில் பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா என்ற பெயரிலும் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது.
ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்:
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அடுத்த 100 ஆண்டுகளுக்கு பொருந்தும் வகையில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு புதிய குற்ற சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்கு உள்ளான தேசத்துரோக சட்டப்பிரிவுகள் புதிய சட்ட மசோதாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. நாட்டுக்கு எதிராக செய்யப்படும் செயல்கள் அனைத்துக்கும் கடும் தண்டனை வழங்க புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அரசு கஜானாவை கொள்ளையடித்தல், ரயில்வே ட்ராக்கை சேதப்படுத்துவது, ஆங்கிலேய ஆட்சியை அவமானப்படுத்துவது ஆகியவற்றுக்கு தண்டனை வழங்கும் சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. புதிய சட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?
ராணுவம், தேர்தல் ஆகியவற்றுக்கும் தனித்தனியாக சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. புதிய சட்டத்தின்படி, கும்பல் வன்முறையில் ஈடுபட்டது நிரூபணமானால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கப்படும். இதுகுறித்து மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "கும்பல் வன்முறை என்பது அருவருப்பான குற்றம். எனவே, கும்பல் வன்முறைக்கு மரண தண்டனை வழங்க புதிய சட்டத்தில் சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆனால், நான் காங்கிரஸிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன். நீங்களும் பல ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்தீர்கள். ஏன் கும்பல் வன்முறைக்கு எதிராக சட்டம் இயற்றவில்லை? எங்களை டார்கெட் செய்யவே கும்பல் வன்முறை என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். ஆனால், நீங்கள் ஆட்சியில் இருந்தபோது சட்டங்களை உருவாக்க மறந்துவிட்டீர்கள்" என்றார்.
புதிய சட்டத்தின்படி, புகார் பெறப்பட்ட மூன்றே நாள்களில் முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்ய வேண்டும். முதற்கட்ட விசாரணையை 14 நாள்களுக்குள் முடிக்க வேண்டும்.