AFSPA | ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமும்; ஐரோம் ஷர்மிளாவும்.. இன்னும் பிற தகவல்களும்..!
ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், நாகாலாந்து மாநிலத்தை மேலும் 6 மாதங்களுக்கு அமைதி குலைந்த பகுதியாக நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் பல ஆண்டுகளாக நாகா படையினருக்கும் இந்திய அரசுக்கும் மோதல் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் ஆயுதப் படைகளின் சிறப்பு அதிகார சட்டம் (AFSPA) அங்கு அமலில் உள்ளது. இந்தச் சட்டத்தின் படி நாகாலாந்து மாநிலம் அமைதி குலைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டு அங்கு ராணுவ படைக்கு சிறப்பு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கடைசியாக கடந்த டிசம்பர் மாதம் நாகாலாந்து பகுதியில் இந்த உத்தரவு 6 மாதங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த உத்தரவு ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், நாகாலாந்து மாநிலத்தை மேலும் 6 மாதங்களுக்கு அமைதி குலைந்த பகுதியாக நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிவிப்பின்படி, “ஜூன் 30 2021 முதல் டிசம்பர் 31 2021 வரை நாகாலாந்து மாநிலம் முழுவதும் அமைதி குலைந்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மாநில காவல்துறையுடன் சேர்ந்து ராணுவத்தினருக்கும் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபடுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு தொடர்ந்து ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டமும் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம், மிகுந்த சர்ச்சைகளுக்கு உள்ளான இச்சட்டம் பற்றி அறிந்து கொள்வது அவசியம். கடைசியாக வடகிழக்கு மாநிலமான மேகாலயாவிலிருந்து இந்தச் சட்டம் 2018, ஏப்ரல் 1ம் தேதி விலக்கிக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இச்சட்டம் பற்றியும் அதன் பின்னணி பற்றியும் அறிந்து கொள்வோம். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் என்று கூறும்போதே கூடவே நமக்கு ஐரோம் ஷர்மிளாவும் நினைவுக்கு வருவார்.
AFSPA சட்டம் என்றால் என்ன?
எளிமையாக விளக்க வேண்டுமென்றால், எந்தப் பகுதியெல்லாம் சர்ச்சைக்குரிய பகுதி என்று அரசால் கண்டறியப்படுகிறதோ, அங்கெல்லாம் ஆயுதப்படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டு பொது அமைதியைக் காக்க உத்தரவிடப்படுகிறது. ஆஃப்ஸ்பா படையினருக்கு சிறப்பு அதிகாரங்கள் தான் கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் சில இடங்களில் வானளாவிய அதிகாரங்கள் இருப்பதாகக் கருதிக் கொண்டு நிகழ்த்தப்படும் அத்துமீறல்கள் தான் இந்தச் சட்டத்தை டெரர் சட்டமாக மாற்றியிருக்கிறது. ஆஃப்ஸ்பா சட்டத்தைக் கொண்டு 5 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடாமல் பார்த்துக் கொள்ள முடியும், ஒரு நபர் சட்டவிரோதமாக நடக்கிறார் என்று கருதினால், சிறு எச்சரிக்கைக்குப் பின்னர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முடியும். சந்தேகத்தின் பேரில் யாரை வேண்டுமானாலும் எங்கு வைத்தும் எந்த நேரத்திலும் கைது செய்ய முடியும். அவ்வாறு கைது செய்யப்படும் நபர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படுவார்.
சரி சர்ச்சைக்குரிய பகுதி என்றால் அது எது? யார் அப்படி வரையறுக்கிறார்கள்?
ஆஃப்ஸ்பா (AFSPA) ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரி சட்டத்தின் மூன்றாவது பிரிவின் படி சில இடங்கள் பதற்றம் நிறைந்த சர்ச்சைக்குரிய பகுதியாகக் கருதப்படுகிறது. மத ரீதியாக, இன ரீதியாக, மொழி அல்லது பிராந்திய ரீதியாக, சாதி ரீதியாக சர்ச்சைகளுக்கு உள்ளாகும் வாய்ப்பு கொண்ட பகுதிகள் பதற்றம் நிறைந்த பகுதிகளாகக் கருதப்படுகிறது. மத்திய அரசோ மாநில ஆளுநரோ அல்லது யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநரோ இவ்வாறாக ஏதேனும் ஒரு பகுதியை பதற்றம் நிறைந்த பகுதியாக அறிவிக்க இயலும். இந்தச் சட்டத்தை ஒரு பகுதியில் நடைமுறைக்குக் கொண்டு வரும் அதிகாரம் மத்திய உள்துறைக்கே உள்ளது.
AFSPA பின்னணி என்ன?
வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு குழுவினருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. இது பெரிய வன்முறைகளாக வெடித்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்துவந்தன. இந்நிலையில் கடந்த 1958-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் இணைந்து ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை இயற்றியது.
இதுவரை இந்தச் சட்டங்கள் எங்கெல்லாம் அமலில் இருந்துள்ளது?
நாகாலாந்து, அசாம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் இந்தச் சட்டம் அமலில் இருந்துள்ளது. ஏப்ரல் 2018-ஆம் ஆண்டில் மேகாலயாவிலிருந்து இச்சட்டம் திரும்பப்பெறப்பட்டது. திரிபுராவில் இந்தச் சட்டம் 2015-ஆம் ஆண்டில் திரும்பப்பெறப்பட்டது. ஜம்மு காஷ்மீரிலும் இதுபோன்றதொரு சட்டம் இருக்கிறது.
மக்கள் என்ன நினைக்கின்றனர்?
இந்தச் சட்டத்தின் தாக்கத்தை நேரடியாக அனுபவித்த னைத்து மக்களுமே தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். மணிப்பூரின் ஐரோம் ஷர்மிளா இச்சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். மணிப்பூரின் மாலோம் நகரில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனை எதிர்த்து ஐரோம் ஷர்மிளா நவம்பர் 2000ல் உண்ணாவிரதம் தொடங்கினார். 2016ம் ஆண்டு ஆகஸ்ட் வரை தனது உண்ணாவிரதத்தை அவர் தொடர்ந்து நடத்தினார்.