Hornbill Festival : பிரமாண்டமாக களைகட்டப்போகும் ஹார்ன்பில் திருவிழா.. எங்கு தெரியுமா மக்களே..?
கோஹிமாவில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள கிசாமாவில் உள்ள நாகா பாரம்பரிய கிராமத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை ஹார்ன்பில் திருவிழா நடைபெறவுள்ளது.
நாகலாந்து மக்களின் பாரம்பரிய திருவிழாதான் இந்த ஹார்ன்பில் திருவிழா. நாகாலாந்தில் வாழும் பழங்குடியின மக்களின் நாட்டுப்புற கதைகளில் இருவாய்ச்சி பறவைக்கு முக்கியத்தும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த இருவாச்சி பறவையின் ஆங்கில பெயர்தான் ஹார்ன்பில் என சொல்லப்படுகிறது.
மிகவும் விழிப்புத்தன்மை வாய்ந்த கம்பீரமான இந்த இருவாச்சி பறவைகள் உயரமான மரங்களில் வசிக்கக் கூடியவை என கூறப்படுகிறது. நாகலாந்து பழங்குடியின மக்களின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்த இந்த இருவாய்ச்சி பறவைக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே ஆண்டு தோறும் இந்த ஹார்ன்பில் திருவிழா கொண்டாடப்படுகிறது.
நாகாலாந்து மக்களின் வாழ்வியலை படம்பிடித்துக் காட்டும் உணவு முறைகள், ஆடல், பாடல், பாரம்பரிய பழக்க வழக்கங்களை அறிந்து கொள்வதற்கு இது ஒரு அரிய சந்தர்ப்பமாக இருக்கும். கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் மாநில அரசின், சுற்றுலா மற்றும் கலை, கலாசார துறை சார்பில் இந்த ஹார்ன்பில் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் இந்த ஹார்ன்பில் திருவிழா நாகலாந்தில் நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது. 2020-ஆம் ஆண்டில், கொரோனா தொற்றுநோய் காரணமாக திருவிழா சுமார் மூன்று நாட்கள் மட்டுமே கொண்டாடப்பட்டுள்ளது. பின்னர் கடந்த ஆண்டு மோன் மாவட்டம் ஓடிங்கில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை அடுத்து திருவிழா இடை நிறுத்தப்பட்டது.
அம்மாநிலத்தில் பாதுகாப்பு படையினரால் பொதுமக்கள் 14 பேர் சுட்டுக் கொல்லபட்டதையொட்டி திருவிழா தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வருடம் ஹார்ன்பில் திருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாக நாகலாந்து அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். மாநில தலைநகர் கோஹிமாவில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள கிசாமாவில் உள்ள நாகா பாரம்பரிய கிராமத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை ஹார்ன்பில் திருவிழா நடைபெறவுள்ளது. இரண்டு ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு,
புகழ்பெற்ற ஹார்ன்பில் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நாகாலாந்தில் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், இந்த முறை மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் என் அம்மாநில அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
மாநிலத் தலைநகர் கோஹிமாவில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள கிசாமாவில் உள்ள நாகா ஹெரிடேஜ் கிராமத்தில் இந்த ஹார்ன்பில் திருவிழா நடைபெற இருப்பதாக சுற்றுலா மற்றும் கலை கலாச்சார ஆலோசகர் ஹெச் கெஹோவி யெப்தோமி தெரிவித்துள்ளார். மாநில அரசின் வருடாந்திர சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வான ஹார்ன்பில் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து நாகா பழங்குடியினருடன் , திங்களன்று பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் கூறியுள்ளார்.
உலகப் புகழ் பெற்ற ஹார்ன்பில் திருவிழா, நாகாலாந்து பழங்குடியினரின் வண்ணமயமான கலை, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமையும் என சுற்றுலா மற்றும் கலை கலாச்சார ஆலோசகர் யெப்தோமி குறிப்பிட்டுள்ளார்.
பழங்குடியின மக்களின் அமைப்பு தலைவர்களிடம் தங்களது வீடுகள் மற்றும் குடிசைகளை பழுது பார்க்க தொடங்கவும் , திருவிழாவிற்குத் தயாராகுமாறு கேட்டுக்கொண்டுள்ள நாகலாந்து சுற்றுலாத்துறை, மகத்தான வெற்றிக்கு அனைவரையும் ஒத்துழைக்குமாறு கோரியுள்ளது. நாகலாந்து வரைபடத்தில் உள்ளவாறு பழங்குடியினருக்கான புவியியல் இருப்பிடங்கள், அவர்களுடைய குழுக்களுக்கான பாரம்பரிய கிராமங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாகலாந்தில் உள்ள திகிர் பழங்குடியினர் ஒரு பெரிய பழங்குடியினமாக அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும், அங்கு அங்கீகரிக்கப்பட்ட 18 பெரிய பழங்குடியின மக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பின் (ENPO) கீழ் உள்ள ஏழு பழங்குடியின தலைவர்கள், கடந்த பண்டிகைகளின் போது தாங்களுக்கு மரியாதை தரப்படவில்லை என குற்றஞ்சாட்டி திருவிழா தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. மேலும் ஹார்ன்பில் திருவிழாவில் பங்கேற்க மாட்டோம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து ENPO அதிகாரிகளிடம் நாகலாந்து அரசு விரைவில் பேச்சுவார்த்தை நடத்திய சுமூக தீர்வு காணும் என யெப்தோமி கூறியுள்ளார். அதை வேலை ஹார்ன்பில் திருவிழாவில் பழங்குடியின தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என தாங்கள் நம்புவதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
பிரம்மாண்டமாக கொண்டாட்டமாக காணப்படும் இந்த திருவிழாவில் பழங்குடியின மக்களின் கலாசாரம் மற்றும் மரபு ஆகிய இரண்டையும் வெளிப்படுத்தும் விதமாக கலை நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. கிஸாமா கிராமத்தில், மாநில அரசே ஒரு பெரிய திறந்தவெளி மைதானத்தை அமைத்து, வணிகக் கட்டடங்கள் , கண்காட்சி மற்றும் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் என ஹார்ன்பில் விழாவை நடத்துகிறது. இந்த பத்து நாள் திருவிழாவில் நாகலாந்து மாநிலத்தின் கலை கலாச்சாரம், அங்குள்ள பழங்குடியினரின் பாரம்பரிய கலை நிகழ்வுகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் என கண்கவரும் வகையில் பல்வேறு பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஹார்ன்பில் திருவிழாவிற்கு நாகலாந்து மக்கள் மட்டுமல்லாது இந்தியாவை தாண்டி உலகளவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிக்கின்றனர்.
அந்த வகையில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஹார்ன்பில் திருவிழாவின்போது சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாகாலாந்துக்கு வந்து சென்றுள்ளனர். அதேபோல் 2019-ஆம் ஆண்டில் 2.82 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து கலந்து கொண்டுள்ளனர் .
ஆகவே இரண்டு வருட இடைவெளியின் பின்னர் நடைபெறும் இந்த பிரம்மாண்ட ஹார்ன்பில் திருவிழாவிற்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது