மும்பை: புர்கா அணிய மறுத்த இந்து மனைவி… கழுத்தறுத்து கொலை செய்த கணவர்!
ஷேக் மற்றும் அவரது குடும்பத்தினர் இஸ்லாமிய மரபுகளைப் பின்பற்றவும், முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகளை அணியவும் வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பெண் அதற்கு மறுத்ததால் குடும்பத் தகராறு தொடங்கியது
மும்பையைச் சேர்ந்த இக்பால் முகமது ஷேக், திலக் நகர் பகுதியில் பர்தா அணிய மறுத்ததற்காகவும் இஸ்லாமிய நடைமுறைகளைப் பின்பற்றாததற்காகவும் இந்து மதத்தை சேர்ந்த தனது மனைவியைக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே இக்பால் முகமது ஷேக் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இடைவிடாத அழுத்தம்
பாதிக்கப்பட்ட ரூபாலிக்கும், குற்றம் சாட்டப்பட்ட இக்பால் முகமது ஷேக்கும் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. அவர்களுக்கு திருமணம் ஆனதில் இருந்து ரூபாலியை இஸ்லாமிய பாரம்பரியத்தைப் பின்பற்றவும், பர்தா அணியவும் கூறி இடைவிடாத அழுத்தத்தை கொடுத்து வந்துள்ளார் ஷேக். ஆனால் ரூபாலி அதனை விரும்பாததால் அதனை செய்யாமலேயே இருந்துள்ளார்.
தனியாக வாழ முடிவு
இறுதியில், 22 வயதான அவர் இஸ்லாமிய நடைமுறைகள் பின்பற்ற சொல்லி தொடர்ந்து சண்டையிட்டு வந்த காரணத்தால் தனியாக வாழ முடிவு செய்தார். இந்த நிலையில் செப்டம்பர் 26, திங்கட்கிழமை மாலை ஷேக் தனது மனைவியைச் சந்தித்தபோது கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கழுத்தை அறுத்து கொலை
கடந்த திங்கட்கிழமையன்று, ரூபாலி இக்பால் ஷேக்கைச் சந்தித்து விவாகரத்து கோரியுள்ளார். ஆனால் அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதாக கூறி அவர் அதனை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. பின்னர் ஷேக் தங்கள் மகனைக் காவலில் வைக்குமாறு கோரியுள்ளார். அதற்கு அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரது கோரிக்கையை ஏற்க மறுத்ததால், இக்பால் ஷேக் மனைவி ரூபாலியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்து அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
காவல்துறை தகவல்
“செப்டம்பர் 26 அன்று இரவு 10 மணியளவில், இக்பால் முகமது ஷேக் என்று அடையாளம் காணப்பட்ட நபர் தனது மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். புகார்தாரரின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது குடும்பத்தினர் இஸ்லாமிய மரபுகளைப் பின்பற்றவும், முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகளை அணியவும் வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பெண் அதற்கு மறுத்ததால் குடும்பத் தகராறு தொடங்கியது” என்று திலக் நகர் காவல் நிலைய ஆய்வாளர் விலாஸ் ரத்தோட் தெரிவித்துள்ளார். ரூபாலியின் குடும்ப உறுப்பினர்கள், போலீஸ் புகாரில், இக்பால் ஷேக் மற்றும் அவரது குடும்பத்தினர் திருமணமான முதல் நாளிலிருந்தே இஸ்லாமிய சடங்குகளைப் பின்பற்றவும், பர்தா அணியவும் அவரை வற்புறுத்தியதாக தெரிவித்துள்ளனர். மேலும் ரூபாலி அதற்கு சம்மதிக்காததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக ரூபாலியும் வீட்டை விட்டு வெளியேறி தனித்தனியாக வசித்து வந்ததாக தெரிவித்தார்கள். கொலை நடந்த உடனே போலீசாருக்கு ரூபாலியின் குடும்பத்தினர் தகவல் தெரிவித்ததால் உடனடியாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.