Prostitution: பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது மட்டுமே குற்றம் - மும்பை நீதிமன்றம்
பொது இடத்தில் மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபடுவது மட்டுமே குற்றம் என்று மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொது இடத்தில் மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபடுவது மட்டுமே குற்றம் என்று மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாலியல் தொழில்:
மும்பையில் பாலியல் வழக்கில் பெண் ஒருவரை ஒரு வருடத்திற்கு பராமரிப்பு இல்லத்தில் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக அப்பெண் செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகினார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த 34 வயது பெண்ணை விடுதலை செய்து உத்தரவிட்டது. பொது இடத்தில் ஒருவர் மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது மட்டுமே சட்டப்படி குற்றம் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
புறநகர் முலுண்டில் உள்ள விபச்சார விடுதியில் கடந்த பிப்ரவரி மாதத்தில் போலீசார் நடத்திய சோதனையின் போது, ஒரு பெண் கைது செய்யப்பட்டார். அவர் மீது எப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது. மேலும் இருவருடன் அப்பெண் மஸ்கானில் உள்ள மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
குற்றமா? இல்லையா..?
பின் அப்பெண்ணின் மருத்துவ அறிக்கையை பார்த்த மாஜிஸ்திரேட்டு நீதிபதி, அவர் மேஜர் என தெரிய வந்ததை அடுத்து, அப்பெண்ணை ஒரு வருடத்திற்கு பராமரிப்பு பாதுகாப்பு மற்றும் தங்கும் இடத்திற்காக நவஜீவன் மகிளா வஸ்திகிரிஹா தியோனார்க்கு அனுப்ப உத்தரவிட்டார். இது தொடர்பாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் அப்பெண் தாக்கல் செய்த மனுவில் தான் ஒழுக்க கேடான செயல்களில் ஈடுபடவில்லை என்று தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி பாதிக்கப்பட்டவர் இதற்கு முன்பும் இது போன்ற செயலில் ஈடுபட்டதன் அடிப்படையில் மட்டுமே அவரை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் காவலில் வைக்க உத்தரவிட்டதாக தெரிவித்தார். எனவே இந்த உத்தரவு சவாலுக்கு உட்பட்டது என்று தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண் மேஜர் என்பதால் அவருக்கு வேலை செய்ய உரிமை உள்ளது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
விதியின் படி பாலியல் தொழிலில் ஈடுபடுவது குற்றமல்ல என்றும், பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது மட்டுமே குற்றம் என்றும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார். மேலும், அந்தப் பெண் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்றும் இது போன்ற ஒரு சூழலில் பாதிக்கப்பட்டவரை காவலில் வைப்பது முறையல்ல என்றும் அமர்வு நீதிபதி கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு நிச்சயமாக அவர்களின் தாய் தேவை. மேலும் பாதிக்கப்பட்ட பெண் அவரது விருப்பத்திற்கு மாறாக காவலில் வைக்கப்பட்டால், அது நிச்சயமாக அது அவரின் சுதந்திரமாக நடமாடும் உரிமையை பாதிக்கும் என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது என நீதிமன்றம் தெரிவித்தது.
எனவே, சட்டப்பூர்வ நிலை, பாதிக்கப்பட்டவர் மேஜர், ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மார்ச் 15 தேதியன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அளித்த உத்தரவை ரத்து செய்து, பாதிக்கப்பட்டவருக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று செஷன்ஸ் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.