PM Modi G7: பிரதமர் மோடி 3.0 - முதல் வெளிநாட்டு பயணம் - ஜி7 மாநாடு தொடங்கி ட்ரூடோ உடனான சந்திப்பு வரையிலான பிளான்
PM Modi G7: மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின், இன்று தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.
PM Modi G7: ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கான பிரதமர் மோடி இன்று இத்தாலி புறப்பட இருக்கிறார்.
மோடியின் இத்தாலி பயணம்:
மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, இத்தாலியில் உள்ள அபுலியா பகுதியில் நடைபெறும் ஜி-7 அவுட்ரீச் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து இன்று அவர் இத்தாலிக்கு புறப்பட உள்ளார். கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, வரும் 15ம் தேதி பிரதமர் நாடு திரும்ப உள்ளார். கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய ஜி7 நாடுகளின் பிரதிநிதிகளோடு, இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட 12 நாடுகளின் தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் போன்ற பல தலைவர்கள் அடுத்த சில மாதங்களில் தேர்தலை சந்திக்கும் போதும், மோடி தனது புதிய பதவிக்காலத்திற்கான திட்டங்களைப் பற்றி விவாதிக்க பல தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை இந்த நிகழ்வு வழங்குகிறது.
ஜி7 கூட்டத்தில் பங்கேற்கும் மோடி:
ஜி-7 நாடுகளின் கூட்டத்திற்கு இந்தியா அழைக்கப்படுவது இது 11வது முறையாகும். மோடி ஐந்தாவது முறையாக இந்த கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அவர் செயற்கை நுண்ணறிவு, ஆற்றல், ஆப்பிரிக்கா மற்றும் "மத்திய தரைக்கடல்" பற்றிய விவாதங்களுக்கான சிறப்பு அமர்வில் பங்கேற்க உள்ளார். அதோடு, ரஷ்யா-உக்ரைன் மோதல் மற்றும் காசாவில் இஸ்ரேலின் போர் ஆகியவை தொடர்பாகவும் மோடி வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.
"G-7 உச்சிமாநாட்டில் இந்தியாவின் வழக்கமான பங்கேற்பானது, அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட உலகளாவிய சவால்களைத் தீர்ப்பதில் இந்தியா தொடர்ந்து செய்து வரும் முயற்சிகளின் அங்கீகாரம் மற்றும் பங்களிப்பை அதிகரிப்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது" என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
மோடி - ட்ரூடோ சந்திப்பு?
கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில், இந்தியா மற்றும் கனடா இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. ஜி-7 மைதானத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ள பிரிண்டிசி நகரில் திறக்கப்படவிருந்த மகாத்மா காந்தியின் சிலை, நிஜ்ஜார் என்று கிராஃபிட்டியால் சிதைக்கப்பட்டதை அடுத்து காலிஸ்தான் பிரச்சினை மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக பேசிய வெளியுறவுத்துறை செயலாளர், “தீவிரவாதம் மற்றும் வன்முறையை ஆதரிக்கும் இந்திய-விரோதக் கூறுகளுக்கு கனடா வழங்கும் அரசியல் இடமே கனடாவைப் பற்றிய முக்கியப் பிரச்னையாகத் தொடர்கிறது. நாங்கள் பலமுறை அவர்களிடம் எங்களது ஆழ்ந்த கவலைகளை தெரிவித்துள்ளோம், அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்,” என்று என்றார். இந்த சூழலில் ஜி7 உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடி, கனட அதிபர் ட்ரோடோவை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.