Modi Surname Case: ”மோடி குடும்ப பெயர் வழக்கு” - ராகுல் காந்தி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது - ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவு
பிரதமர் மோடியின் குடும்பப்பெயர் வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மோடியின் குடும்பப்பெயர் வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான அடுத்த விசாரணை ஆகஸ்ட் 16ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விசாரணை முடியும் வரை ராகுல் காந்திக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தல் போன்ற எந்த நடவடிக்கைகளையும் எடுக்க நீதிமன்றம் இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
மோடியின் குடும்பப் பெயரைப் பற்றி அவதூறாகப் பேசியதாக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. 2019 லோக்சபா தேர்தலுக்கான தனது பிரசாரத்தின் போது, ராகுல் காந்தி, “நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி... எப்படி அவர்கள் அனைவருக்கும் மோடி என்பதை பொதுவான குடும்பப்பெயராக வைத்துள்ளனர். எல்லா திருடர்களுக்கும் எப்படி மோடி என்று பொதுவான குடும்பப்பெயராக இருக்கிறது?" என குறிப்பிட்டு பேசியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக குஜராத்தில் ஒரு தனி வழக்கில் ராகுல் காந்தி சட்டரீதியான விளைவுகளை ஏற்கனவே சந்தித்துள்ளார். பிரதமர் மோடியின் குடும்பப் பெயரைப் பற்றி தகாத கருத்து தெரிவித்ததற்காக சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இருப்பினும், சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் அவர் மக்களவை உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர் என்று அரசாங்கம் அறிவித்தது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட காரணத்தால், எம்பிக்களுக்கு வழங்கப்படும் அரசு பங்களாவில் இருந்து ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என மக்களவை செயலகம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அதன்படி, டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்து, அதை மக்களவை செயலகத்திடம் ராகுல் காந்தி சமீபத்தில் ஒப்படைத்தார். அரசு பங்களாவை காலி செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்துஸ்தானை சேர்ந்த மக்கள் 19 ஆண்டுகளாக இந்த வீட்டை எனக்கு கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். உண்மையைப் பேசுவதற்கான விலை இது. உண்மையை பேசுவதற்கு எந்த விலையையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்" என்றார்.
இந்நிலையில், ஜார்கண்ட் நீதிமன்றம் ராகுல் காந்தி மீது எந்த நடவடிக்கையும் எடுக்ககூடாது என உத்தரவிட்டுள்ளது.