கர்ப்பிணி முதல் குழந்தைகள் வரை தடுப்பூசி.. 58 கோடி பேருக்கு இலவச சிகிச்சை.. பெருமையாக சொன்ன மோடி
உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் மூலம் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது என உலக சுகாதார கூட்டமைப்பில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

ஜெனீவாவில் இன்று நடைபெற்ற உலக சுகாதார கூட்டமைப்பின் 78ஆவது அமர்வில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, "இந்த ஆண்டு உலக சுகாதார கூட்டமைப்பின் கருப்பொருள் 'ஆரோக்கியத்திற்கான ஒரு உலகம்'.
"ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் இலவச சிகிச்சை"
இது, உலக சுகாதாரத்திற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையுடன் எதிரொலிக்கிறது. கடந்த 2023ஆம் ஆண்டில் நான் இந்தக் கூட்டத்தில் உரையாற்றியபோது, 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' பற்றிப் பேசினேன். உள்ளடக்கம், ஒருங்கிணைந்த தொலைநோக்கு மற்றும் ஒத்துழைப்பைப் பொறுத்தே ஆரோக்கியமான உலகின் எதிர்காலம் உள்ளது.
இந்தியாவின் சுகாதார சீர்திருத்தங்களின் மையத்தில் உள்ளடக்கம் உள்ளது. உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரதத்தை நாங்கள் செயல்படுத்துகிறோம். இது, 580 (58 கோடி) மில்லியன் மக்களை உள்ளடக்கியது. இதன் மூலம் இலவச சிகிச்சையினை வழங்குகிறோம்.
இந்தத் திட்டம் சமீபத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இந்தியர்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. எங்களிடம் ஆயிரக்கணக்கான சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களின் கட்டமைப்பு உள்ளது. அவை புற்றுநோய், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களை பரிசோதித்து கண்டறிகின்றன.
பிரதமர் மோடி என்ன பேசினார்?
ஆயிரக்கணக்கான பொது மருந்தகங்கள் சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் உயர்தர மருந்துகளை வழங்குகின்றன. சுகாதார விளைவுகளை மேம்படுத்த தொழில்நுட்பம் ஒரு முக்கியமான ஊக்கியாக செயல்படுகிறது.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதைக் கண்காணிக்க எங்களிடம் ஒரு மின்னணு தளம் உள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் தனித்துவமான மின்னணு சுகாதார அடையாளத்தைக் கொண்டுள்ளனர். காப்பீடு, பதிவுகள் மற்றும் தகவல்களை ஒருங்கிணைக்க இது எங்களுக்கு உதவுகிறது.
தொலை மருத்துவம் மூலம், எவரும் ஒரு மருத்துவரிடம் இருந்து வெகு தொலைவில் இல்லை. எங்களுடைய கட்டணமில்லா தொலை மருத்துவச் சேவை 340 மில்லியனுக்கும் அதிகமான மருத்துவ ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
எங்கள் முன்முயற்சிகள் காரணமாக, ஒரு மகிழ்ச்சியான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மொத்த சுகாதார செலவின சதவீதத்தில் செலவு கணிசமாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில், அரசின் சுகாதாரச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளது.
"உலகின் ஆரோக்கியம் இதை பொறுத்துதான் உள்ளது"
மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை நாம் எவ்வளவு சிறப்பாகக் கவனித்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே உலகின் ஆரோக்கியம் உள்ளது. உலகளாவிய தென் பகுதி நாடுகள் குறிப்பாக சுகாதார சவால்களால் பாதிக்கப்படுகிறது.
பிரதிபலிக்கக்கூடிய, அளவிடக்கூடிய மற்றும் நிலையான மாதிரிகளை இந்தியாவின் அணுகுமுறை வழங்குகிறது. எங்கள் கற்றல்களையும் சிறந்த நடைமுறைகளையும் உலகத்துடன், குறிப்பாக உலகளாவிய தென் பகுதி நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.
ஜூன் மாதம், 11வது சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு, 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கு யோகா' என்ற கருப்பொருளில் பின்பற்றப்பட உள்ளது. உலகிற்கு யோகாவை வழங்கிய நாட்டிலிருந்து, அனைத்து நாடுகளையும் பங்கேற்க அழைக்கிறேன்" என்றார்.





















