(Source: ECI/ABP News/ABP Majha)
Rape | 11 வயதில் இருந்து தந்தை உட்பட 28 பேரால் பாலியல் வன்கொடுமை.. வெளிச்சத்துக்கு வந்த கொடூரம்..
6 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, அவரது தந்தை வலுக்கட்டாயமாக ஆபாச வீடியோக்களை காண்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
உத்தரபிரதேச மாநிலத்தின் லலித்பூரில் தனது தந்தை, அரசியல்வாதிகள் உட்பட 28 ஆண்களால் தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக சிறுமி ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் பிரதான கட்சிகளாக உள்ள பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) மற்றும் சமாஜ்வாடி கட்சி (எஸ்பி) உறுப்பினர்கள் மற்றும் அக்கட்சிகளின் மாவட்ட தலைவர்களின் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
17 வயது சிறுமி தனது புகார் மனுவில் பல வருடங்களுக்கும் மேலாக தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட 28 பேருக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையின்படி, சிறுமி, 6-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, அவரது தந்தை வலுக்கட்டாயமாக ஆபாச வீடியோக்களை காண்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மகேஷ்புரா எனும் இடத்தில் உள்ள ஒரு வயலில் தனது தந்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த சம்பவத்திற்கு பிறகு தன்னை அடிக்கடி விடுதிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பல ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் சிறுமி.
இந்நிலையில், "இது மிகவும் அரிதான மற்றும் முக்கியமான வழக்கு, இந்த வழக்கை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது, அதேபோல அவரது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது” என லலித்பூர் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த திலக் யாதவுக்கும் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த சம்பவத்தில் தன்னை தொடர்புபடுத்தினால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக நியாயமான விசாரணை கோரி மாவட்ட நீதிபதியிடம் மனு ஒன்றை அளிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் தந்தை உட்பட சம்பந்தப்பட்ட 28 பேர் மீது போக்ஸோ சட்டம் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த 2020ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரசில் 19 வயது பட்டியலின இளம்பெண் ஒருவர் மாற்று சமூகத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு செய்யப்பட்டார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவரை அலிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, காயங்களின் தீவிரத்தால் மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அப்பெண் உயிரிழந்தார். இரவோடு இரவாக அப்பெண்ணின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்ற போலீசார், பெற்றோரின் அனுமதியின்றி எரியூட்டியதாக புகார் எழுந்தது. நாடு முழுவதும் இச்சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உயிரிழந்த பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தன.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில், பாலியல் வன்கொடுமை, கூட்டு பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் பாதுகாப்பு பற்றி சரியான நடவடிக்கைகளை உத்தரபிரதேச பாஜக அரசு எடுக்கவில்லையா என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.