ஏப்ரல் 1 முதல்.. பால் விலை உயர்கிறது.. பெங்களூருவில் வாழவே முடியாது போல!
பால் விலை உயர்வால் பெங்களூரில் வசித்து வரும் மக்கள் திணறி வருகின்றனர். ஏற்கனவே கடந்தாண்டு பால் விலையை ஒரு பாக்கெட்டுக்கு ரூ. 2 உயர்த்தியது கர்நாடக பால் கூட்டமைப்பு.

கர்நாடகாவில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர உள்ளதாக அம்மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. என். ராஜண்ணா தெரிவித்துள்ளார். பால் கூட்டமைப்புகள் மற்றும் விவசாயிகள் கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து, பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
உயர்கிறது பால் விலை:
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சிறந்த உணவாக பால் உள்ளது. குறிப்பாக, கால்சியம் அதிக அளவில் உள்ளது. எலும்பை ஆரோக்கியமாக வைப்பதில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. பால், தயிர் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்களை தினமும் சீராக உட்கொள்ள வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, அத்தியாவசிய உணவு பொருளாக பால் உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட உள்ளது. பால் விலை உயர்வு, வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. என். ராஜண்ணா, "விலையை உயர்த்துவது என்ற முடிவை பால் கூட்டமைப்பு எடுத்துள்ளது.
லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்த வேண்டும் என அவர்கள் கேட்டனர். அரசாங்கம் அதை ஏற்றுக்கொண்டு ஏப்ரல் 1 முதல் ரூ. 4 உயர்த்த முடிவு செய்திருக்கிறோம். உயர்த்தப்பட்ட 4 ரூபாய் முழுவதும் விவசாயிகளுக்குச் செல்ல வேண்டும்" என்றார்.
திணறும் பெங்களூர்வாசிகள்:
காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் முதலில் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் உயர்த்தப்பட்டது. அதையடுத்து, மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது பால் விலையும் உயர்த்தப்பட உள்ளது. முன்னதாக, கர்நாடக பால் கூட்டமைப்பின் தலைவர் பீமா நாயக்கும் பால் விலை உயர்வு குறித்து சூசகமாக தெரிவித்திருந்தார்.
கர்நாடக பால் கூட்டமைப்பு (KMF) அதன் பால் பொருட்களை 'நந்தினி' பிராண்டின் கீழ் விற்று வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டில், பால் விலையை ஒரு பாக்கெட்டுக்கு ரூ. 2 உயர்த்தி, ஒரு பாக்கெட்டுக்கு 50 மில்லி அளவை அதிகரித்தது கர்நாடக பால் கூட்டமைப்பு. கடந்த 2024 ஆம் ஆண்டில், மேற்கொள்ளப்பட்ட விலை உயர்வு உயர்வு அல்ல, ஏனெனில் வழங்கப்படும் பாலின் அளவும் அதிகரித்துள்ளதாக KMF விளக்கம் அளித்தது. தற்போது, 1,050 மில்லி கொண்ட நந்தினி டோன்ட் பால் (நீல நிற பாக்கெட்) ரூ. 44க்கு விற்கப்படுகிறது. பால் விலை உயர்வால் பெங்களூரில் வசித்து வரும் மக்கள் திணறி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

