கைதாகிறாரா துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா? டெல்லி அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!
வழக்கின் விசாரணைக்காக மணிஷ் சிசோடியா இன்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு பொறுப்பு வந்தபிறகு, மதுபான விற்பனை கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது.
புதிய மதுபானக் கொள்கை:
அதன்படி, டெல்லி பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு எழுந்தது.
இதனால், கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலையில் புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றது. இதனிடையே, மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா குற்றம்சாட்டினார்.
துணைநிலை ஆளுநரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, இதுதொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) வழக்கு பதிவு செய்தது.
விசாரணை வளையத்தில் டெல்லி துணை முதலமைச்சர்:
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக மணிஷ் சிசோடியா இன்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். ஆம் ஆத்மி கட்சி ஆதரவாளர்கள் பேரணியாக சென்று சிசோடியாவை சிபிஐ அலுவலகத்திற்கு வழி அனுப்பி வைத்தனர். இதனால், டெல்லி சாலைகள் பரபரப்பாக காணப்பட்டது.
இன்று காலை 10 மணிக்கு வீட்டிலிருந்து வெளியேறிய மணிஷ் சிசோடியா, தன்னுடைய காரின் மீது ஏறி நின்றபடி கூடியிருந்த கட்சியினருடன் பேரணியாக சென்றார். டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்குச் சென்ற அவர், பின்னர் அவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.
மனிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்ய உள்ளதால், பல ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
பேரணிக்கு நடுவே பேசிய சிசோடியா, "நான் 7-8 மாதங்கள் சிறையில் இருந்தால் கூட, என்னை நினைத்து வருத்தப்படாதீர்கள். பெருமை கொள்ளுங்கள். பிரதமர் மோடி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பயப்படுகிறார். எனவே, அவர் என்னை ஒரு போலி வழக்கில் சிக்க வைக்க விரும்புகிறார்.
நீங்கள் போராட வேண்டும். முதல் நாள் முதல் எனக்கு ஆதரவாக இருந்த என் மனைவி, உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் தனியாக இருக்கிறார். அவரை கவனித்துக்கொள்ள வேண்டும். டெல்லியில் உள்ள குழந்தைகளுக்குச் சொல்ல விரும்புகிறேன். நன்றாக படியுங்கள். உங்கள் பெற்றோர் சொல்வதை கேளுங்கள்" என்றார்.
சிறை சென்றால் சாபமல்ல, பெருமை:
இதுகுறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வட்டரில் குறிப்பிடுகையில், "கடவுள் உங்களுடன் இருக்கிறார், மணீஷ். லட்சக்கணக்கான குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோரின் ஆசிகள் உங்களுடன் உள்ளன. நாட்டிற்காகவும், சமுதாயத்திற்காகவும் சிறை சென்றால் அது சாபமல்ல. பெருமை.
நீங்கள் விரைவில் சிறையில் இருந்து திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன். குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் டெல்லியில் உள்ள நாங்கள் அனைவரும் உங்களுக்காக காத்திருப்போம்" என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, பிப்ரவரி 19ஆம் தேதி, சிசோடியாவை சிபிஐ விசாரணைக்கு அழைத்தது. ஆனால், அவர் டெல்லியின் நிதி அமைச்சராக பொறுப்பு வகிப்பதால் டெல்லி பட்ஜெட்டை தயார் செய்ய ஒரு வார கால அவகாசம் கோரினார். அவரது கோரிக்கையை சிபிஐ ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.